குலக்கல்வித் திட்டம் ஒழித்த காமராஜர்..நினைவு நாளில் நினைவுகூர்வோம்!
குலக்கல்வியும் ஒரு வகையில் நல்லது தான். ஏனெனில் குலக்கல்வியை ராஜாஜி அறிமுகம் செய்யாமல் போயிருந்தால் காமராஜர் முதலமைச்சராகும் வாய்ப்பும் குறைவாகவே இருந்திருக்கும்.
எளிமையின் இலக்கணமாக திகழ்ந்த காமராஜர் கல்வியில் அவர் செய்த புரட்சிக்காக கல்விக்கண் திறந்த காமராஜர் என்று எல்லோராலும் புகழப்படுகிறார். கல்விக்காக அவர் எவ்வளவோ விஷயங்களை செய்திருந்தாலும் அவர் செய்ததில் முக்கியமானது குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகிவிட்டார் காங்கிரஸ்காரரான் ராஜாஜி. ராஜாஜி முதலமைச்சரானபோது தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். 100க்கு 5 பேர் படித்தாலே பெரிது என்ற நிலை. பெண்கள் ஒருநாளைக்கு 3 மணி நேரம் படித்தாலே போதும் என்று உத்தரவிட்டிருந்தார். 1946-ல் முதல் வகுப்பில் சேர்ந்த 12 ,22,775 குழந்தைகள் 5-ம் வகுப்பிற்கு வருவதற்குள் 100ல் 63 பேர் பாதியிலே நின்றுவிட்டார்கள்.
இந்த நிலையில் 1950ல் இந்தியா குடியரசு நாடானதோடு, கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டுவர அனைவருக்கும் கல்வி கொடுக்கும் நோக்கில் பத்தாண்டு திட்டங்களைத் தீட்டியது மாநில அரசு. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களைச் சேர்ப்பதோடு ஒரு கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் 1950-51ம் நிதியாண்டில் வெறும் ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் பள்ளியிலிருந்து பாதியிலேயே விலகும் மாணவர்களின் விகிதம் அதிகமானது. அப்போது எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கத் தேவையான அளவு பள்ளிகள் கிடையாது. தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்களும் கிடையாது. 1952ல் சென்னை மாகாணத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ராஜாஜி அதிக செலவில்லாமல் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி அளிக்க புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அது தான் குலக்கல்வித்திட்டம்.
5 மணி நேரமாக இருந்த பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாக மாற்றப்பட்டு, முதல் நேரமுறையில் மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் பாடம் கற்க வேண்டும் என்றும், இரண்டாவது நேர முறையில் வீட்டில் தந்தையிடமிருந்து அவர்களுடைய தொழிலைக் கற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மாணவிகள் தாயாரிடமிருந்து சமையலையும், வீட்டு வேலைகளையும் கற்பர். இத்தகு தொழில்கள் இல்லாத பெற்றோரை உடைய மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவர்களுடன் சேர்ந்து தொழில் கற்பர். இதுதவிர அந்த நேர முறையில் ஊர் பொதுப் பணிகள் சார்ந்த சாலைகளைச் சீரமைத்தல், துய்மைப்படுத்துதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர் இது தான் குலக்கல்வியின் சாராம்சம்.
இந்த திட்டம் அப்போது திராவிட இயக்கத்தினரை கிளர்ந்தெழச்செய்தது. பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பலரும் கடுமையாக எதிர்த்தனர். போராட்டங்களை அறிவித்தார் பெரியார். இதையெல்லாம் விட ராஜாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது காமராஜர் தான். ராஜாஜியும், காமராஜரும் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் உள்ளிருந்தே கடுமையாக எதிர்த்தார் காமராஜர். பைத்தியக்காரத் தனமான திட்டம் என்று கூறினார். நிலைமை பெரிதாகவே காமராஜரையும், ராஜாஜியையும் அழைத்து பேசினார் பிரதமர் நேரு. ஆனாலும், பிரச்சனை சரியாகவில்லை. ராஜாஜி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த ராஜாஜி, "நான் கொண்டு வந்த கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தி என்னை அவமானப்படுத்த வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்" எனக் கூறியவர் 1954 ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன்பிறகு பல்வேறு உறுப்பினர்களின் அமோக ஆதரவோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் காமராஜர். முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் செய்த முதல் வேலை குலக்கல்வியை குப்பைத் தொட்டிக்கு அனுப்பியது தான். ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். பசியோடு இருப்பவன் எப்படி படிப்பான் என்று மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1920லேயே நீதிக்கட்சி இத்திட்டத்தை கொண்டுவந்திருந்தாலும், இதை விரிவுபடுத்தினார் காமராஜர். முதல் ஐந்தாண்டு ஆட்சியில், 4,267 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்றிருந்த நிலையை மாற்றி, பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் கல்வி கற்க தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் பள்ளியில் சேர்வோர் எண்ணிக்கை அதிகமானது.
பல குடும்பங்களில் முதல் பட்டதாரியாக இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால் காமராஜரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். பல குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய ஒப்பாரும் மிக்காருமானவர் காமராஜர். திராவிடக் கட்சிகள் கல்வியை அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் சென்றன. ஆனால் விதை காமராஜர் போட்டது. இதனாலேயே அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று போற்றப்படுகிறார்.
குலக்கல்வியும் ஒரு வகையில் நல்லது தான். ஏனெனில் குலக்கல்வியை ராஜாஜி அறிமுகம் செய்யாமல் போயிருந்தால் காமராஜர் முதலமைச்சராகும் வாய்ப்பும் குறைவாகவே இருந்திருக்கும். கல்வி வள்ளல் என்ற காமராஜர் கிடைக்காமலே போயிருந்திருக்கலாம். குலக்கல்வியை ஒழித்து கல்விக் கண்ணைத் திறந்த காமராஜரின் 46வது நினைவு நாள் இன்று.