TN Assembly: கள்ளச்சாராய மரணம்! சட்டசபை கூட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அ.தி.மு.க. வியூகம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த விவகாரத்தை சட்டசபையில் பெரிதுபடுத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
![TN Assembly: கள்ளச்சாராய மரணம்! சட்டசபை கூட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அ.தி.மு.க. வியூகம்! kallakurichi death issue admk plan to big argument tamilnadu assembly section TN Assembly: கள்ளச்சாராய மரணம்! சட்டசபை கூட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அ.தி.மு.க. வியூகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/5006f6b6986ce3694d69694e83a2d4511718876843931102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை என்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்:
நேற்று இரவு 16 பேராக இருந்த உயிரிழப்பு இன்று மதியத்திற்குள் 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் முழுவதும் மரண ஓலம் ஒலிப்பது பெரும் சோகத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலிலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவில்லை என்று தி.மு.க. அரசு மீது அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நாளை முதல் வரும் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் வழக்கம்போல நடைபெறும்.
அ.தி.மு.க. திட்டம்:
தமிழ்நாடு முழுவதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை பெரியளவில் எழுப்ப அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர்.
கடந்தாண்டு நடந்த சம்பவத்தின்போது ஆளுங்கட்சியான தி.மு.க. அரசு, கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்த சூழலில், தற்போது கள்ளக்குறிச்சியில் 39 பேர் உயிரிழந்தது தி.மு.க. அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்தாண்டு சம்பவம் மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என இரண்டு சம்பவங்களை சட்டசபையில் எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
அரசு நடவடிக்கை:
அ.தி.மு.க. மட்டுமின்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு பிரதான எதிர்க்கட்சியாக போட்டியிடும் பா.ம.க.வும் இந்த விவகாரத்தை பெரியளவில் சட்டசபையில் எழுப்ப வியூகம் வகுத்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை விஸ்வரூபம் எடுக்கவும் தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. மேலும், மதுவிலக்கு அதிகாரிகளை கூண்டோடு பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)