Senthil Balaji: ஜாமின் கேட்ட செந்தில் பாலாஜி.. நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா..?
செந்தில் பாலாஜியின் பிணை மனு சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி:
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால் அவரது கைது சரியானது என உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
சிறையில் அமைச்சர்:
அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. பின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரானார், அப்போது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடித்து உத்தரவிடப்பட்டது. அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாமின் மனு:
பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
இதனால் நேற்று ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே ஜாமின் மனுவை விசாரிக்கும் என அறிவித்துள்ளார். சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்த நிலையில் முறையீட்டுக்காக செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றம் விரைந்துள்ளனர்.