’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
"டாப் 10-ல் 7 பேர், டாப் 100-ல் 79 பேர் எங்கள் மாணவர்கள்" என தேர்ச்சி பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் இடங்களுடன் விஷன் ஐஏஎஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தது.

யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, புகழ்பெற்ற 'விஷன் ஐஏஎஸ்' (Vision IAS) பயிற்சி மையத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறிய செயல் என ஆணையம் கூறியுள்ளது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் குறித்து, "டாப் 10-ல் 7 பேர், டாப் 100-ல் 79 பேர் எங்கள் மாணவர்கள்" என தேர்ச்சி பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் இடங்களுடன் விஷன் ஐஏஎஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தது.
விசாரணையில் வெளியான அம்பலம்
விசாரணையில், 2020ஆம் ஆண்டு தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமார், தங்களிடம் முழு நேர 'அடிப்படை பயிற்சி வகுப்பில்' (GS Foundation Batch) படித்ததாகக் குறிப்பிட்ட நிறுவனம், அவருடன் விளம்பரத்தில் இடம்பெற்ற மற்ற தேர்ச்சி பெற்றவர்கள் என்ன படித்தார்கள் என்ற விவரத்தை வேண்டுமென்றே மறைத்துள்ளது தெரியவந்தது.
இதன் மூலம், மற்றவர்களும் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் கொண்ட முழு நேரப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தவர்கள் போன்ற ஒரு தவறான தோற்றத்தை விஷன் ஐஏஎஸ் உருவாக்கியுள்ளது. ஆனால், ஆணையத்தின் ஆழமான விசாரணையில், 2022 மற்றும் 2023-ல் அந்த நிறுவனம் உரிமை கோரிய 119 மாணவர்களில், வெறும் 3 பேர் மட்டுமே முழு நேரப் பயிற்சி வகுப்பில் படித்தவர்கள் என்பது அம்பலமானது. மீதமுள்ள 116 பேர், பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வு, மாதிரித் தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல் போன்ற குறுகிய காலப் பயிற்சிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
மீண்டும் அதே தவறு
இந்தத் தேர்ந்தெடுத்த தகவல்களை மட்டும் வெளியிடுவது என்பது மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றும் செயல் என ஆணையம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற தவறான விளம்பரத்திற்காக எச்சரிக்கப்பட்டிருந்தும், விஷன் ஐஏஎஸ் மீண்டும் அதே தவறைச் செய்ததால், இந்த முறை அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நாடு முழுவதும் 57 பயிற்சி மையங்களுக்குத் தவறான விளம்பரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 28 நிறுவனங்களுக்கு ரூ.1.09 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் முதலீடு செய்யும் யூபிஎஸ்சி தேர்வு விஷயத்தில், பயிற்சி நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
https://doca.gov.in/ccpa/checkuploaddocs.php?updocs=./uploads/1766050300-Vision_IAS_Final_Order__3_.pdf&unique_id= என்ற ஆணையத்தில் இதுதொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.






















