இந்தியாவின் பாரம்பரிய கணிதம்: கொரிய மாநாட்டில் சாதனை! கணித பயம் போக்கும் புது வழி!
சர்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை கொரியாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரை தேர்வு.

சர்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை கொரியாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரை முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. '' ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கணித அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம்'' என்ற தலைப்பில் பாரம்பரிய இந்திய கணித முறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரை, கொரியாவின் சியோலில் நடைபெறும் 9வது கிழக்கு கணித கல்வி மாநாட்டில் (EARCOME 9) சமர்பிப்பதற்காக தேர்வாகி உள்ளது. ஜூலை 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் முதன்முறையாக இந்தியா பங்கேற்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு
இந்த ஆய்வு கட்டுரையை ஆரோவிலில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் ஆரோவில் பள்ளியின் கணித ஆசிரியை பூவிழி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இதற்கு குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி ஐஏஎஸ் உதவியுள்ளார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அளவியல் நுட்பங்களை கற்பித்த அனுபவம் பெற்றவர்.
வரலாற்று சாதனை
மேலும், சியோலில் நடைபெறும் கணித கல்வி மாநாட்டில் இந்தியா சார்பில் டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் கணித ஆசிரியை பூவிழி இருவரும் பங்கேற்கின்றனர். இந்த ஆய்வு கட்டுரை பாரம்பரிய இந்திய கணித முறைகள் நவீன கல்வியில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? என்பதை ஆராய்கிறது. மேலும், இந்த முறைகள் மாணவர்களின் கணித புரிதல் மற்றும் ஆர்வத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றன? என்பதை வகுப்பறை சோதனைகள் மூலம் நிரூபிக்கிறது.
இது தொடர்பாக பேசிய ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, '' இந்தியாவின் பாரம்பரிய கணித முறைகள் குழந்தைகளுக்கு கணிதத்தை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்குகின்றன. உலகளவில் கணிதம் குறித்த பயம் மற்றும் வெறுப்பு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த ஆய்வு, கணிதத்தை மாணவர்களுக்கு உண்மையான வாழ்க்கை சூழல்களுடன் இணைத்துக் கற்பிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்கும் ஒரு வழியை வழங்குகிறது." என்று தெரிவித்தார்.
கட்டுரையை எழுதியுள்ள ஆரோவில் பள்ளி கணித ஆசிரியை பூவிழி கூறுகையில், " மாணவர்கள் இப்போது கணிதத்தை முன்பை விட ஆர்வத்துடன் கற்கிறார்கள். வடிவியல் மற்றும் இயற்கணிதத்தின் அடிப்படைக் கருத்துகளை அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள். இது கணிதக் கல்வியில் ஒரு பெரிய முன்னேற்றம்'' என தெரிவித்தார்.
மேலும், இந்த ஆராய்ச்சி, கணிதக் கல்வியில் இந்தியாவின் பாரம்பரிய முறையை மீண்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு படி என்றும் எதிர்காலத்தில், இந்த முறைகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.





















