(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Report : பகீர்..இரண்டு நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 3.1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழக கடலோரப்பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யயும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயத்தில், வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4 அல்லது 5 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை இடையே தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மற்றும் மிகவும் பரவலாக மழை பெய்யும். அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 5 நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 25-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, கேரளா மற்றும் மாஹேயில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் குளிர்அலை வீசுவதற்கும் மிகவும் சாத்தியம் உள்ளதாகவும், அது பின்னர் படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் கனமழையால் சென்னையில் தி.நகர், சாலிகிராமம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கியது.