’பத்து பைசா பெறாத செல்லா காசு’ ஹெச்.ராஜாவை விளாசித்தள்ளிய மதுரை பாலா..!
'கட்சியில் யாரும் கண்டுக்கொள்வதில்லை காரைக்குடி மக்களும் கண்டுக்கொள்ளவில்லை. சாரணர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டால் கூட முகத்தில் கரி பூசி அனுப்புகின்றனர்'
’பத்து பைசா பெறாத செல்லாக்காசு எச்.ராஜா’ என்று பேசி திமுகவின் மதுரை பாலா ஒரு காணொளி வெளியிட்டிருப்பார். அப்படி கட்சியில் தான் ‘செல்லாக்காசாக’ ஆகிவிட்ட விரக்தியை தாங்கிக்கொள்ள முடியாமல், ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், யாரையாவது வம்பிழுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அவர்.
ஹெச்.ராஜா பேசிய பேச்சுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கொடுத்து மத்திய அமைச்சர் ஆக்குவார்கள் என்று பார்த்தால், அவரிடம் இருந்த தேசிய செயலாளர் என்ற பொறுப்பை கூட பறித்துக்கொண்டது பாஜக தலைமை. சரி இத்தனை வருடம் ‘வாயால்’ உழைத்த உழைப்புக்கு பாஜக தமிழக தலைவர் பதவியையாவது தருவார்கள் என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்த ஹெச்.ராஜாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, ’கண்ட’ மாதிரி பேசி கட்சியை தமிழகத்தில் வளர்தெடுக்க இரவு, பகலாக ‘இலவு காத்த கிளியாக’ இருந்து முயற்சித்த ஹெச்.ராஜாவை கண்டுக்கொள்ளாமல், இப்போது கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு கட்சித் தலைவர் பதவி கொடுத்து கவுரவப்படுத்தியது டெல்லி.
நான் அவமானப்படுத்தப்பட்டேன், நேரடியாக அவமானப்படுத்தப்பட்டேன் என்று தன் சகாக்களிடம் புலம்பிய ஹெச்.ராஜா, அண்ணாமலை பதவியேற்புக்கு போக மாட்டார், புறக்கணித்து தன் எதிர்ப்பை பதிவு செய்வார் அவர் ’மானஸ்தர்’ என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், முதல் ஆளாக பொன்னாடை போர்த்தி அண்ணாமலைக்கு வாழ்த்து சொன்னார் ஹெச்.ராஜா.
‘பால் பொங்கும், பச்ச தண்ணி எப்படி பொங்கும்’ என்பது போல பார்த்த தன் ஆதரவாளர்களை ‘பொறுமை, பொறுமை, அரசியல் ல எருமை மாதிரி இருக்கனும்ய்யா’ என்ற புதுப்பேட்டை டயலாக்கை சொல்லி புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சென்றிருக்கிறார்.
கட்சியில் யாரும் கண்டுக்கொள்வதில்லை காரைக்குடி மக்களும் கண்டுக்கொள்ளவில்லை. சாரணர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டால் கூட முகத்தில் கரி பூசி அனுப்புகின்றனர். பின்னர் தான் கண்டுக்கொள்ளப்பட என்னதான் செய்வது என யோசித்த ஹெச்.ராஜா, தன் ’வாயே தனக்கு உதவி’ என மீண்டும் வாய்க்கு வந்தவற்றை பேசும் பத்திரிகையாளர் சந்திப்புகளை வைக்கத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி அவர் பேசிய பேச்சுகள்தான் மக்களை, பத்திரிகையாளர்களை, திமுகவினரை, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் அறிவாலாயத்தில் பிச்சை எடுப்பவர், சீமானின் அம்மா ஒரு மலையாளி, ஊடகங்களை Prestitute என்று ஏகத்திற்கும் பேசியிருக்கிறார்.
அவர் பேசிய பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்ட வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை ஊடகங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.