TASMAC சரக்குகளின் விலை உயர்வா? குடிமகன்களுக்கு ஷாக் தருமா புதிய GST விகிதங்கள்?
ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நாடு முழுவதும் ஏற்கனவே இருந்த ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை உருவாக்கி 5 மற்றும் 18 சதவீதம் வரி மட்டும் என்று அறிவித்துள்ளனர். மேலும், 40 சதவீத வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட் உள்ளிட்ட சில பொருட்களுக்கும். சில ஆடம்பர பொருட்களுக்கும் 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
உயரப்போகும் மதுபான விலை:
இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசு 40 சதவீத வரியை சிகரெட் மற்றும் சில பானங்களுக்கு விதித்துள்ளது.
இந்த 40 சதவீத வரி விதிப்பின் கீழ் மதுபானம் வராவிட்டாலும், பாட்டீல்கள், மூடிகள் மற்றும் லேபிள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 12 முதல் 15 சதவீதம் வரை இதற்கு முன்பு இருந்த வரி தற்போது 18 சதவீதமாக மாறியள்ளது. அதேபோல, போக்குவரத்து சேவைக்கான வரியும் 18 சதவீதம் என்பதால் இது மதுபானங்களின் விலையில் உள்ளடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய்:
இதனால், மதுபானங்களின் விலையும் உயரும் சூழல் உருவாகியுள்ளது. முன்னனி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் டாஸ்மாக் அதிகாரி ஒருவரும் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் சார்பில் 551 வகையான பிராண்ட்களின் 302 வகை மதுபானங்கள் விற்கப்படுகிறது. 26 பீர் வகைகள், 223 ஒயின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூபாய் 48 ஆயிரத்து 344 கோடி வரை விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குடிமகன்கள் அதிர்ச்சி:
தமிழ்நாட்டில் மதுபான விலை உயர இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எதிரொலித்தாலும், தமிழக அரசின் வருவாயில் மதுபானம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபான விற்பனை மூலம் வரும் வருவாய் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.





















