கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்
அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி. கரூரில் தடை இன்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்.
கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்
அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரூரில் தடையின்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேபிள் ஆபரேட்டர்கள் முறையிட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடந்த 30 வருடங்களாக அரசு கேபிள் ஆபரேட்டராக தொடர்பு பணியாற்றி வருகிறோம். கேபிள் தொழில் பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்து தற்போது தமிழக அரசு கேபிள் பாக்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கரூர் மாவட்ட கௌரவ தலைவர் பாக்கி தங்கராஜ், “தமிழக அரசுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். இருந்த போதும் கடந்த மூன்று நாட்களாக கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முழுவதும் செயல்படாமல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைபேசியிலும், நேரிலும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டால் 24 மணி நேரத்தில் சரியாகிவிடும் என பதில் தெரிவித்தனர். ஆனால் மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். முறையாக கேபிள் கட்டணம் செலுத்துபவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் பார்க்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
எனவே தற்போது டிஜிட்டல் முறையில் உள்ள செட் ஆப் பாக்ஸ்களை வழங்க வேண்டும். மேலும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து வரும் சிக்னலை தனியார் மென்பொருள் நிறுவனம் முன்னறிவிப்பின்றி தடை செய்துள்ளது. இது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு அரசு கேபிள் வழக்கம் போல் இயங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர், “கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் டிவி தொழில் செய்து வருகிறோம். கடந்த 2011 முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைப்புகளை வழங்கி வருகிறோம். 2017 முதல் செட்டாப் பாக்ஸ் பொருத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் சிக்னல் தடைபட்டுள்ளது. இதுவரை சரி செய்யாமல் அரசு கேபிள் டிவி நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் தனியார் கேபிள் டிவி, டிடிஹச் முறைக்கு சந்தாதாரர்கள் மாறி வருவதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.