Governor RN Ravi: தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயற்சியா? தமிழகம் எனக் குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ரவி விளக்கம்
தமிழ்நாட்டை ஏன் தமிழகம் என அழைத்தேன் என ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கமளித்துள்ளார்.
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் , சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்” ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில், பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
செய்தி வெளியீடு. @pibchennai @ANI @PTI_News pic.twitter.com/7gvTBoExzZ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 18, 2023
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு:
கடந்த 4ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ”மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது” என கூறினார்.
அதைதொடர்ந்து, நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். அதோடு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும், தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றது. மேலும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை. ஆளுநரின் இந்த அடுத்தடுத்த செயல்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்நிலையில் தான், தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து, ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.