Governor RN Ravi: 'சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ .. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் வெடித்த சர்ச்சை...
வடலூரில் நடைபெற்ற 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடலூரில் நடைபெற்ற 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். முன்னதாக வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் இருக்கும் வள்ளலார் சித்தி அடைந்ததை இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அதன்படி, ‘உலகின் மிகப்பெரிய ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்து விழாவில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வள்ளலார் 10 ஆயிர வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்துள்ளேன். அதேபோல் வள்ளலாரின் நூல்களை படித்த போதும் பிரமித்து போனேன். இங்குள்ள மக்களின் உடையும், தோற்றமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் உண்மை என்பது ஒரே கடவுள், அவன் படைத்த மனிதன், செடி, கொடிகள் எல்லாம் ஒரே குடும்பம். அந்த வகையில் என்னில் உன்னையும், உன்னில் என்னையும் காண்பது சனாதான தர்மம் தான்.
வள்ளலாரின் வரிகளான ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்பது சனாதன தர்மத்தின் எதிரொலி. ஆனால் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை சிலர் தவறாக நினைக்கின்றனர். காரிருளை நீக்க 200 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜோதி தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது. ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும் வெளிநாட்டில் இருந்து வந்த புதிய வழிபாட்டு நடைமுறைகளால் நமது அடையாளம் மறைந்து போனது.
சிறு தெய்வம், பெரும் தெய்வம் வழிபாடு இருந்த போதிலும் சண்டைகள் இருந்ததில்லை. ஆனால் புதிதாக வெளியில் இருந்து வந்த மதங்கள் என்னுடையது பெரியது என கூறியபோது தான் பிரச்சினை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நம் அடையாளம் அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். 1852 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சமூக கட்டமைப்பு அழிய வேண்டும் என எழுதிய கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவினார்’ என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.