Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் லட்சக்கணக்கான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவராக பணியாற்றி வருபவர் மூத்த மருத்துவர் பாலாஜி. இந்த நிலையில் இவரை நேற்று நோயாளி போல வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து:
மாநிலத்தின் தலைநகரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனை ஊழியர்களே மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்:
பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதேசமயம், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்தனர். இதன்படி, தமிழ்நாட்டில் இன்று அரசு மருத்துவர்கள் காலை முதலே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 900 மருத்துவமனைகள், 45 ஆயிரம் மருத்துவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டாலும், இன்று அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இன்று செயல்படவில்லை.
லட்சக்கணக்கில் நோயாளிகள் அவதி:
தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலையிலே அரசு மருத்துவமனைகளில் குவிந்த நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கான நோயாளிகள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் சிரமமான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கில் புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருவது வழக்கம். இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு குவிந்துள்ள நோயாளிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு வரும் நோயாளிகளும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது உடல்நிலை தேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.