CBI | சிபிஐ விசாரணையில் உள்ள முக்கியமான தமிழ்நாடு வழக்குகள் என்னென்ன? முழு விபரம் இதோ!
சிபிஐ விசாரணையில் உள்ள முக்கியமான தமிழ்நாடு வழக்குகள் என்னென்ன?
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 2012ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு முதலில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின்னர் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு முதல் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. எனினும் தற்போது வரை சிபிஐ காவல்துறையினரால் கொலை குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஐயிடம் விசாரணையில் உள்ள சில முக்கியமான தமிழ்நாடு வழக்குகள் என்னென்ன?
டிஎஸ்பி விஷ்ணுப்பிரிய வழக்கு:
பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா கடந்த 2015-ல் தான் தங்கியிருந்த வீ்ட்டில் தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால், விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிபிஐயிடம் நிலுவையில் உள்ளது.
குட்கா வழக்கு:
2016 ஆம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள குட்கா கிட்டங்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை முன்னாள் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. 2018-ல் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவ் ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் 3 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கைதான 6 பேர் தவிர, அமைச்சர் பெயரோ காவல்துறை அதிகாரிகள் பெயரோ இடம்பெறவில்லை. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கைதான அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு:
கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழக காவல்துறை 207 வழக்குகளை பதிவு செய்திருந்தது. அதுவும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ, 2 அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு:
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. கைதான 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு 2019 மார்ச் மாதம் வழக்கு சிபிஐக்கு தமிழக அரசே மாற்றியது. ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்தது. சம்பவ இடத்திற்கு சென்றும் விசாரித்தது. 2020ஆம் ஆண்டு மே மாதம் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை:
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் தந்தை புகார் அளித்தார். இந்த வழக்கு 2019 டிசம்பர் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஐஜி சிவணாண்டி வழக்கு:
2015ஆம் ஆண்டு ஐஜி சிவணாண்டி மீது பாண்டிராஜ் என்ற நபர் ஒரு புகார் அளித்தார். அதன்படி அவர் புகார் அளித்து வந்த தன்னை ஐஜியின் துண்டுதலில் சிலர் வழிமறத்தை கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு:
தஞ்சையில் மாணவி ஒருவர் கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மாணவியின் தந்தை வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு !