''அங்க இருக்கிறதே நாலு பேரு..'' சசிகலாவின் ஆலமர கதைக்கு அசால்டாக பதிலளித்த ஜெயக்குமார்!
சசிகலாவுக்கு எப்போதுமே அதிமுகவில் இடம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
![''அங்க இருக்கிறதே நாலு பேரு..'' சசிகலாவின் ஆலமர கதைக்கு அசால்டாக பதிலளித்த ஜெயக்குமார்! Former minister Jayakumar reacts on sasikala ADMK speech ''அங்க இருக்கிறதே நாலு பேரு..'' சசிகலாவின் ஆலமர கதைக்கு அசால்டாக பதிலளித்த ஜெயக்குமார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/05c258fcacfe0eb4139f497a650fec49_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சசிகலா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' சசிகலாவை எப்போதுமே அதிமுகவில் சேர்க்க மாட்டோம். இதுதான் நிரந்தர நிலைப்பாடாகும்.அமமுகவில் 4பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அனைவருமே அதிமுகவுக்கு வந்து விட்டனர்’’ எனத் தெரிவித்தார்.
சசிகலா..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சிவி சண்முகம் தீவிர விசுவாசியாக இருந்த முகமது ஷெரீப் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது மகள் திருமண விழா சசிகலா முன்னிலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் சசிகலா
பின்னர் மேடையில் சசிகலா பேசும்போது, “ஒரு மிகப்பெரிய ஆலமரம். இதில் எத்தனையோ கோடிக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்து வந்துள்ளன. ஒரு சில பறவைகள் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று சுயநலத்துடன் இருக்கும். அவைகளால் கூட இருக்கும் மற்ற பறவைகளுக்கும் மரத்திற்கும் எந்தவிதமான பயனும் ஏற்படாது. அதே சமயத்தில் வேறு சில பறவைகள் இருக்கும் இடமே தெரியாது. ஆனால், தன்னோடு இருக்கும் மற்ற பறவைகளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் ஆலமரத்தில் அடைந்த பலன்களை நன்றியோடு நினைத்து மரத்திற்கும் பாதுகாப்பாக விளங்கும்.
அதுபோன்ற ஆலமரமாக விளங்கும் இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கும் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன். அம்மா என்று நாடகமாடிய ஒரு சில பொய் முகங்களுக்கு மத்தியில் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு நம் இயக்கத்தில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர் எந்தவிதமான சாதி, மத பேதமின்றி அனைவரின் பேராதரவோடு இந்த இயக்கத்தை உருவாக்கினார். ஜெயலலிதாவும் அதே வழியைதான் பின்பற்றினார். தற்போது நானும் இதே வழியைதான் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறேன்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். இது தொண்டர்களால் உருவான ஒரு பேரியக்கம். கழக தொண்டர்களுக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் தொடங்கப்பட்டது. இது எத்தனையோ துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் வேரறுத்த இயக்கம். ஆகையால் எந்தவிதமான துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்த இயக்கதை யாராலும் அடக்கிவிட முடியாது. அதேபோல் இயக்கத்தை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தொண்டர்கள்தான் இயக்கத்தின் உண்மையான சொந்தக்காரர்கள். எனவே எந்தவிதமான வேறுபாடின்றி தொண்டர்களை அரவணைத்து சென்றால்தான் இந்த இயக்கம் மீண்டும் புதுப்பொழிவுபெறும். இந்த உன்னத பணியை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)