சென்னை மக்களே! இன்று முதல் மின்சார ரயில் ரத்து; எங்கெல்லாம்? - கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கம்!
காலை 9.30 மணிமுதல் மதியம் 1.30 வரை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வரை ரயில் சேவை ரத்து.
சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால் கூடுதல் மாநகரப் பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட உள்ளன.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைவரை செல்லும் மின்சார ரயில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இன்று முதல் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணிவரை ரயில் சேவை இருக்கும். காலை 9.30 மணிமுதல் மதியம் 1.42 வரை பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயங்கும்.
காலை 9.30 மணிமுதல் மதியம் 1.30 வரை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வரை ரயில் சேவை ரத்து.
செங்கல்பட்டிலிருந்து காலை, 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கும் அரக்கோணத்தில் இருந்து 5.15 மணிக்கு புறப்படும் ரயிலும் மாற்றாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 மணிக்கு புறப்படும் மகளிர் ரயிலுக்கு பதிலாக அனைவரும் பயணிக்கும் ரயிலாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பேருந்துகளும் கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் தாம்பரத்தில் இருந்து திநகர், பிராட்வேக்கு 20 கூடுதல் பேருந்துகளும் இன்று முதல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.