"தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிய குஜராத்" ஸ்டாலினுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்
மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழ் நாட்டை பின்னுக்குத் தள்ளி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் "உலக முதலீட்டாளர் மாநாடு" போன்றவை வெற்று விளம்பரங்களாகவே மாறியுள்ளன என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்:
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "விளம்பர வெற்றிகளில் மட்டுமே மிதக்கும் பொம்மை முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின். நீங்கள் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.
இந்தியாவின் 51% அந்நிய முதலீடுகளை (FDI) மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழ் நாடு வெறும் $.3.68 பில்லியனுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
"தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிய குஜராத்"
மகாராஷ்டிரா ($.19.6 பில்லியன்), கர்நாடகா ($.6.62 பில்லியன்), டெல்லி ($.6 பில்லியன்), குஜராத் ($.5.71 பில்லியன்) என்று முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழ் நாட்டை பின்னுக்குத் தள்ளி உள்ளன. நிதி மேலாண்மை நிபுணர்கள், மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு நட்புக் கொள்கைகள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்தியதன் விளைவாக FDI-ஐ கவர்ந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ் நாட்டில் உள்கட்டமைப்பு தேக்கம், துறைகள் தோறும் பெருகிப்போன ஊழல், பல நிலைகளில் பேரம் பேசுவது, முதலீட்டாளர்களை ஈர்த்து தக்க வைப்பதற்கான கொள்கைகளை வகுக்காதது மற்றும் புதிய யுக்திகளை மேற்கொள்ளாதது போன்றவை முதலீட்டாளர்களை மற்றும் முதலீடு ஈர்ப்பைத் தடுக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.
2024-25-ல் மொத்த FDI $81.04 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ் நாட்டின் பங்கு வெறும் 4.5% மட்டுமே. பதிவுகள் மற்றும் இணைய தரவுகளின்படி, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் "உலக முதலீட்டாளர் மாநாடு" போன்றவை வெற்று விளம்பரங்களாகவே மாறியுள்ளன.
'ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ? மிகச் சொற்பமே! உண்மையில் கர்நாடகாவின் IT மையங்களும், மகாராஷ்டிராவின் தொழில் மயமாக்கலும் முதலீட்டாளர்களைக் கவர்கின்றன. அந்த அரசுகளும் அதற்கு முயற்சிகள் செய்கின்றன.
"வாய்ச்சவடால் மட்டும் போதாது"
தமிழ் நாடு முதலீட்டு ஓட்டத்தில் மீண்டெழ உள்கட்டமைப்பு மேம்பாடு, தூய்மையான நிர்வாக முறைகள் எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிப்படையான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரங்களில் மட்டும் "நம்பர் ஒன்" என முழங்குவது முதலீடுகளை ஈர்க்காது என்பதை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்களே, உண்மையான முன்னேற்றத்திற்கு உறுதியான செயல்கள் தேவை! வாய்ச்சவடால் மட்டும் போதாது.
தமிழ் நாடு 2015-16, 2017-18ல் கூட அதிக வளர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம். ஏன், கொரோனா காலத்தில்கூட இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோதும், தமிழ் நாட்டின் வளர்ச்சி நேர்மறையாக இருந்தது. அப்போதெல்லாம் யாரும் தமிழக பத்திரிகைகளில் முதல் பக்க முழு விளம்பரம் கொடுத்துக் கொள்ளவில்லை.
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை. இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்" என விமர்சித்துள்ளார்.





















