இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்...மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தும் திமுக
பெரம்பலூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் குறித்து விளக்கும் வகையில் நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
பெரம்பலூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என்று அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளிவந்தவுடன் - இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக திமுக தலைவர்தான் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, முதலமைச்சர் அவர்கள் 16.10.2022 அன்று கடிதம் எழுதி - இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
#BREAKING
— Raja Shanmugasundaram (@SRajaJourno) October 27, 2022
பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்களாக நடத்தப்போவதாக திமுக அறிவிப்பு
பெரம்பலூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார் @abpnadu
இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழ்நாடு மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
நடைபெற உள்ள இடங்கள், பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றது. அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.