(Source: ECI/ABP News/ABP Majha)
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம்! முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக!
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பேசியதாவது:
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், “ஒரு மாநிலத்தில் நடப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது அரசியல் நெறி. அதனை ஏற்பதும் ஏற்காததும் கர்நாடகாவின் விருப்பம்.கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை சமாளிக்க வேண்டியது கர்நாடகா அரசாங்கம் தான். காவிரி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்” இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நேற்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் தொடக்கப் புள்ளியாக முகவர்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ நாடாளுமன்ற தேர்தலில் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்து விடக்கூடாது.
இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற உணர்வோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் உங்களுடைய முக்கியமான கடமை.
நம்முடைய சாதனைகளை தொடர்ந்து நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்களுடைய கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். அதற்கு உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரை பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாக்காளரின் பெயர், அவருடைய வயது, அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யார் யார்; என்ன படித்திருக்கிறார்கள்; எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் 200 குடும்பங்கள் இருந்தால் அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும்”. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
மேலும் படிக்க