Watch Video :- 'குரு'வுக்கு பதிலாக 'ஸ்டாலின்' பெயர் ஏற்பீர்களா? - திமுக எம்.பி செந்தில்குமார் பேசியது என்ன?
ஜெய்பீம் படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகள் குறித்து தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் நமது ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ ஜெய்பீம் படம் மிகவும் நன்றாக உள்ளது. விளிம்புநிலையில் உள்ள மக்களின் குரலாக அது எதிரொலித்துள்ளது. இந்த படத்தினால் இத்தனை நாட்களாக சமூகத்தில் அவர்கள் குரல் கேட்க முடியாத சூழல் இருந்த இடத்தில், அவர்கள் குரல் ஓங்கி எழுப்பப்பட்டுள்ளது. சமுதாயத்தில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு ஜெய்பீம் ஒரு சிறந்த உதாரணப் படமாக அமைந்துள்ளது.
ஜெய்பீம் படத்தில் சர்ச்சையான சில விவகாரங்களில் என்னுடைய கருத்து, இரண்டு பக்கங்களிலும் சில நியாயங்கள், சரி செய்திருக்கக்கூடிய விஷயங்கள் என்றுதான் கூறுவேன். படத்தை முதலில் பார்க்கும்போது எந்த ஒரு குறியீடும் யாருக்கும் இல்லை. இரண்டு விஷயங்களைதான் குறிப்பிடுகிறார்கள், ஒன்று அந்த காலண்டர். மற்றொன்று அந்த பெயர். என்னைப் பொறுத்தவரையில் சூர்யா மீது எந்த தவறும் இருப்பது போன்று தெரியவில்லை.
இந்தப்படம் அருமையான படம். விமர்சனங்கள் தவிர்த்திருந்தாலும் இந்த சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். நாம் இதுவரை ஒரு வியூகமாகதான் பேசி வருகிறோம். சூர்யாவோ, இயக்குனரோ இதுவரை தெளிவுபடுத்தவில்லை. தெரிந்தே செய்திருந்தால் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். இயக்குனரின் ஒரு பேட்டி பார்த்தேன். நிருபர்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்வியை தவிர்த்துவிடுகிறார். எனது பார்வையில் சூர்யாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியர் சங்கத்தின் குறியீடு அது என்பது அனைவருக்கும் தெரியும் என்பது உண்மைதான். ஆனால், கலை இயக்குனர் அனைத்து வடிவமைப்புகளையும் ஏற்பாடு செய்துவிட்டு, நடிகர் வந்து நடிக்கும்போது நடிகர் அதை கவனித்திருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு தயாரிப்பாளராக சூர்யா அதை நீக்கவிட்டு வேறு காலண்டர் வைத்துள்ளார். அதேசமயத்தில் இயக்குனர் பார்வையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், வாய்ப்பு கிடைத்ததால் பிரதிபலித்திருக்கலாம். நான் பார்க்கும்போது குரு என்ற பெயர் பெரிதாக தெரியவில்லை. பொதுவான ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும்போது நிறைய விஷயங்கள் தெரியாது.
என்னுடைய பார்வை முற்றிலும் மாறுபட்டது. வன்னியர்களாக இருப்பவர்களுக்குதான் அந்த வலி தெரியும் என்று கூறுவது போல, அதேசமூகத்தைச் சேர்ந்த எனக்கு இதையெல்லாம் பார்க்கும்போது ஏதும் வலி ஏற்படவில்லை. அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒருவரை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. எந்தவிதத்திலும் படத்தின் கதையை இது மாற்றியமைக்கப் போவதில்லை என்பதால் இதுபோன்ற விவகாரங்களை தவிர்த்திருக்கலாம்.
இயக்குனருக்கு எங்காவது வலி ஏற்பட்டிருந்தால், அதை பிரதிபலிக்க வேண்டும் என்று இந்த காட்சியை வைத்திருந்தால், அவர் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். இயக்குனர் கேள்விக்குள்ளாகிறார். நான் சூர்யாவை ஏதும் சொல்லமாட்டேன். இந்த படம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தசமூகத்தினருக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்காத அவலத்தை வெளிப்படுத்துகிறது. சூர்யாவும் இதில் உடன்பட்டிருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும். சூர்யாவின் அறிக்கையிலும் விளக்கம் இல்லை. நீங்கள் திட்டமிட்டுதான் செய்திருந்தால் அதற்கான நியாயத்தை விளக்கமளிக்க வேண்டும். மாற்றம் செய்யக்கூடாது.
குரு என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைத்திருந்தால், அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஒரு படமாக நான் பார்க்கும்போது எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அந்த வில்லன் கதாபாத்திரத்தில் கருணாநிதி, ஸ்டாலின் என்ற பெயர் வைத்திருந்தாலும் எனக்கு ஏதும் தோன்றிருக்காது. ஒரு படமாக பார்க்கும்போது கடந்து போயிருப்பேன். இரு தரப்பையும் பார்க்கும்போது சிலருக்கு பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள்.
அன்புமணியின் அறிக்கையுடன் நான் முழுவதும் உடன்படவில்லை. மோகன்ஜி சில தலைவர்களை குறியீடாக வைத்து படம் எடுத்துள்ளார். அதை மற்றவர்கள் பெருந்தன்மையுடன் கடந்து சென்றுள்ளனர். அந்த படம் சாதிய வன்மத்துடன் எடுக்கப்பட்ட படமாகத்தான் நான் பார்க்கிறேன். இதுதொடர்பாக கேள்வி எழுப்பும்போது பதிலளிப்பதை இயக்குனர் தவிர்த்துவிடுகிறார். சூர்யாவின் அறிக்கையிலும் பெயர் அரசியல் என்று கடந்துவிடுகிறார்.
வார்த்தைகளாக சொல்லும்போது பிரச்சினை கிடையாது. ஆனால், வன்முறையிலோ, மிரட்டலோ விடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு சமுதாயத்தை பற்றி பேசும்போது அவர்களின் வலியை மட்டும் பேசுவோம். பிற சமுதாயத்தினரை தொடர்புபடுத்தி பேசத்தேவையில்லை. தவறு செய்ததால் மாற்றுகிறீர்களா? அல்லது தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறீர்களா? என்பதற்கு பதில் வரவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.