‘செந்தில் பாலாஜியை முடக்கினால் தாமரை மலரும் என நினைக்கிறார்கள்’ - திமுக எம்.பி., ஆ.ராசா கடும் விமர்சனம்
கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள் என திமுக எம்.பி. ஆ.ராசா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள் என திமுக எம்.பி. ஆ.ராசா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா , “தனிமனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் இன்னொரு ஆட்சி சரி செய்யலாம். நீதிமன்றம் அல்லது போராட்டம் மூலம் சரி செய்யலாம். எல்லா அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்கள் தவறாக பயன்படுத்தி அநீதி இழைக்கும் போது நாடு ஸ்தம்பிக்கும்.
அத்தகைய காட்டாட்சியை எதிர்ப்பது, மதசார்பின்மை, ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என மற்ற மாநில தலைவர்கள் சொல்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தர வேண்டுமென கைது செய்துள்ளனர். சிறு, சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் தொடங்கி பலரையு கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
அதானி குழுமம் செய்த மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். ஆனால் மோடி மெளனம் சாதிக்கிறார். காட்டாட்சி, ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி நடத்துபவர்கள், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள். அடுத்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெறும். அப்போது இந்திய பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கலைஞர் வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா இருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “ஒன்றிய அரசு அடக்குமுறையை அவிழ்த்து விட்ட போது, அதற்கு எதிராக களம் கண்டு திமிறி எழுந்த மண் தமிழ் மண். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒரு காலத்திலும் நடைபெறாது. முதலமைச்சர் நினைத்து இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மாநில உரிமைக்காக போராடும் தலைவர்களை அடக்க ஒடுக்க நினைக்கிறார்கள். இதற்கு காலம் பதிலளிக்கும். அத்துமீறி செந்தில் பாலாஜியை கைது செய்த பாஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்” என கூறினார்.