DMK: முதல்வர் தலைமையில் ஜனவரி 10ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை?
திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம்:
தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய ஆலோசனை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள், முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பேரவை கூட்டத் தொடர் குறித்தும், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் கடந்த 4ம்தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர்:
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுவார். அதைதொடர்ந்து, நடைபெற உள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. திராவிடம் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். இதனால், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், ஆளும் திமுகவிற்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு, சொத்து வரி உள்ளிட்டவை உயர்வு குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.