Vijayakanth Hospitalised: மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது? தேமுதிக அதிரடி அறிக்கை..!
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதி நாளை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த 12ம் தேதி உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து அவரது தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில், தற்போது மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் (28.12.23) வீடு திரும்புகிறார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
என்ன ஆனது விஜயகாந்த்-க்கு..?
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. அப்போது, எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக ஆவின் பால் விலை ஏற்றத்திற்காக குரல் கொடுத்த விஜய்காந்தின் செயல் இன்று வரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பிறகு சற்றே உடல்நிலை குன்ற தொடங்கிய விஜயகாந்துக்கு பேச்சு, நடவடிக்கை, செயல் என அனைத்தும் மாற தொடங்கியது. திமுக, அதிமுகவிற்கு பிறகு தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த தேமுதிக, அதன்பிறகு மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கியது.
தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமாக இருந்த பிரேமலதாவே கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்தார் பிரேமலதா. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. அதனால், பிறந்தநாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் விஜயகாந்துடன் அவர் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு எடுத்து கொண்டிருந்தனர்.