Dahi Label Row: ஆவின் தயிரில் இந்திக்கு 'நஹி' - கடும் எதிர்ப்பால் வாபஸ்
ஆவின் தயிரில் இந்தியில் தஹி என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
ஆவின் தயிரில் இந்தியில் தஹி என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தித் திணிப்பு சர்ச்சை
மத்திய அரசும் இந்தித் திணிப்பு சர்ச்சையும் புதிதல்ல. பன்னெடும் காலமாக இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நெடிய வரலாற்றைக் கொண்டது.
இதற்கிடையே ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக்கூடாது என்றும், தாஹி என்று இந்தியில்தான் எழுத வேண்டும் எனவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தியில் பெரிய எழுத்துகளிலும் தேவையெனில் மாநில மொழிகளில் அடைப்புக் குறிக்குள்ளும் எழுதலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் மறைமுகமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது எனவும் அதை ஏற்க முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமான எதிர்வினையை ஆற்றி இருந்தார்.
’தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்’
முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், ’’எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்!” என்று தெரிவிக்கப்படிருந்தது.
அதேபோல ஆவின் தயில் பாக்கெட்டில் தாஹி என்று இந்தியில் அச்சிட முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் ABP Nadu-விடம் தெரிவித்தார். இதுகுறித்து ABP Nadu-க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், ’’கடந்த ஜனவரி 11ஆம் தேதி தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத்தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என கடிதம் எழுதி இருந்தது. இதை ஆகஸ்ட் மாதத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் எங்களால் முடியாது என்று மறுத்துவிட்டோம். ஏனெனில் இந்தி வார்த்தையைச் சேர்க்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. திமுக என்றும் மும்மொழித் திட்டத்துக்கு உடன்படாது. நாங்கள் இருமொழிக் கொள்கைக்கு உடன்பாடு உள்ளவர்கள்.
மொழி உணர்வு
தயிர் என தமிழிலும், Curd என்று ஆங்கிலத்திலும் மட்டுமே அச்சிடுவோம் என்று தெரிவித்துவிட்டோம். ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. நமக்குத் தமிழ் மொழியின்மீது பற்றும் பாசமும் உள்ளதுபோல அவர்களுக்கும் மொழி உணர்வு உள்ளது.
இதேபோல பால் என்ற வார்த்தைக்கு தூத் என்று அச்சிட வேண்டும் என கடந்த ஆண்டு அறிவுறுத்தி இருந்தனர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு இவ்வாறு செய்கிறது'' என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆவின் தயிரில் இந்தியில் தஹி என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ’’ஏராளமான கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து, Curd (Dahi) அல்லது Curd (Mosaru) அல்லது Curd (Zaamut daud) அல்லது Curd (Perugu) அல்லது Curd (தயிர்) என்று பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.