மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் மேயர்..!
கரூர் மாநகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 2 ஆயிரத்து 500 ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முக கவசம் அணிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனை தீவிரப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக கவசங்களை வழங்கினர்.
மேலும், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தாமாக முன்வந்து முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து ஜவகர் பஜார் பகுதியில் உள்ள உணவகங்கள், நகை கடைகள், துணிகடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து, கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் வழங்க வேண்டும் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தினர். தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நல அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் வழங்கியது கவசத்தை ஆர்வத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் பெற்றுச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்