CM Stalin: "ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசுபவர்” எழுத்தாளர் பாமாவுக்கு ஒளவையார் விருது - முதல்வர் வாழ்த்து
ஒளவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![CM Stalin: CM Stalin says heartfelt congratulations to the writer Bama who has been selected for the avvaiyar award CM Stalin:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/0ff104f29f4f7a2712697d0b7049cfc01709898112433102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CM Stalin: ஒளவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் 'ஔவையார் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஔவையார் விருது, எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார்.
மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த எழுத்தாளர் பாமா?
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவிற்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் "ஒளவையார் விருது" வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அவ்வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளது.
அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார்
இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய "கருக்கு" என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதை பெற்றுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)