CM Stalin Spain Visit: "பை பை ஸ்பெயின்" தாயகத்திற்கு உற்சாகமாக திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாளை சென்னை திரும்பும் முதல்வர்:
ஸ்பெயின் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”ஸ்பெயினில் நல்ல நினைவுகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு நன்றி. ஸ்பெயினும், அதன் அற்புதமான மனிதர்களும் நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம்:
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சென்றிருந்தார். ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.
முதலில், ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, உரையாற்றினார்.
இதனை அடுத்து, ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
ஒப்பந்தங்கள்:
அதைத் தொடர்ந்து, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr.Rafael Mateo மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் Mr.Manuel Majon Vilda ஆகியோர், தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனம் ரூ.2500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மேலும், ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரி ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

