Chennai: சென்னை மாநகரப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் - அச்சச்சோ!
தலைநகர் சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையினால், ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி சாலையில் திடீரென விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து, என்.எஸ்.கே. நகர் சிக்னலை கடந்த போது, பேருந்தின் பின் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணி கீழே சறுக்கியபடி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்தியதால் உயிர் தப்பினார். ஓட்டை வழியே பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார்.
ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்:
ஓட்டுநர் பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட பின்னர், பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய பின்னர் கீழே விழுந்த பெண் பயணியை பேருந்தில் வந்தவர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் விரைவாக ஓடிச் சென்று மீட்டதால், பின்னால் வந்த வாகனம் கீழே விழுந்த பெண் பயணி மீது மோதாமல் இருந்தது. இதனாலும் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த பெண் பயணிக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்து பலகை உடைந்து, பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் ஒரு பயணி சாலையில் கீழே விழுந்த சம்பவம் தற்போது சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு, அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.