Minister Anbil Mahesh: வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகள் படிப்பை நிறுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்!
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேராத மாணவி நர்மதாவின் தந்தை திருவேங்கட பெருமாளிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை என்றார் ஐயன் திருவள்ளுவர்.
அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன், பொருள், மண் உள்ளிட்ட செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகாது என்பதே இதன் பொருள்.
கல்விதான் அழியாத செல்வம் என்பதே ஆன்றோர் வாக்கு. அதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேராத மாணவி நர்மதாவின் தந்தை திருவேங்கட பெருமாளிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அப்போது, ’பாப்பா 12ஆம் வகுப்பு முடித்துவிட்டதா?’ என்று அமைச்சர் கேட்க, ’முடித்துவிட்டு, ஊரில் இருக்கிறாள்’ என்று மாணவியின் தந்தை தெரிவித்தார்.
’ஏன் கல்லூரியில் சேர்க்கவில்லை?’ என்று அமைச்சர் கேட்க, ’வசதி இல்லாததால் நிப்பாட்டி விட்டோம்’ என்கிறார் திருவேங்கட பெருமாள்.
படிக்க வைக்க வேண்டியது அரசின் கடமை
இதற்கு விரிவாக பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘’வசதியைக் காரணம் காட்டி, பிள்ளைகளின் படிப்பை நிறுத்தக்கூடாது. அதனால் உங்களுக்கு என்ன தேவை என்று மனுவாக எழுதுங்கள். அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுங்கள். நர்மதா என்ன படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அதைப் படிக்க வைக்க வேண்டியது அரசின் கடமை.
புதுமைப் பெண் திட்டம் குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு, அரசு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையைக் கல்லூரிப் படிப்புக்காக வழங்குகிறது. உங்களின் பாரத்தை அரசும் முதலமைச்சருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
உங்கள் மகள் என்ன படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, எந்தக் கல்லூரியில் படிக்க விரும்புகிறார்களோ, அதைக் குறிப்பெடுத்து, மனுவாக எழுதிக் கொடுங்கள். அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டுசென்று கொடுங்கள். அவர் விரும்புவதைப் படிக்க வைக்க வேண்டியது எங்களின் கடமை, பொறுமை.
நாம் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து
நாளை திருச்சி வந்ததும் ஆட்சியரை அழைத்துப் பேசுகிறேன். வறுமையைக் காரணம் காட்டி, என்றுமே மாணவர்களின் படிப்பை நிறுத்தக் கூடாது. குழந்தைகளைப் படிக்க வையுங்கள். அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.