Vande Bharat Update: சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வோருக்கு ஒரு அருமையான அப்டேட் வந்துள்ளது. இனி அவர்கள் டிக்கெட்டிற்கு கவலைப்பட வேண்டியதில்லை.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவீன வசதிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்
நாடு முழுவதிலும் 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள், நவீன தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.
ரயில் இயக்கப்படும் வேகம், குளிர்சாதன வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், பயணிகளிடையே வந்தே பாரத் ரயில்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், ஏராளமான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னையிலிருந்து கோவை, நெல்லை, மைசூர் ஆகிய இடங்களுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையிலிருந்து பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு புதன் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில்தான் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில்கள் தற்போது 16 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ள திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம், ரயில் எண்கள் 20627/20628 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, வரும் 8-ம் தேதி முதல், இந்த இரண்டு ரயில்களும் கூடுதலாக 4 பெட்டிகளுடன், அதாவது மொத்தம் 20 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே நாளில், மறுமார்க்கத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல மற்ற ரயில்கள் சுமார் 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த வந்தே பாரத் ரயில், 8 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால், இந்த ரயிலை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால், பயணிகள் இனி டிக்கெட் கிடைக்காமல் திண்டாட வேண்டிய அவசியமிருக்காது என நம்பலாம்.





















