(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Fog: கொடைக்கானலாக மாறிய சென்னை! காரணம் என்ன? - வானிலை ஆய்வாளர் விளக்கம்
சென்னையில் காலை முதல் நகரின் அனேக பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
வானிலை எப்போதுமே ஒரே மாதிரி இருப்பதில்லை. விழி மூடி திறக்கும் நொடியில் பல மாற்றங்கள் ஏற்படும். டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே வெயில், மழை, புயல், பனிமூட்டம் என மாறி மாறி வானிலை நிலவரம் இருந்து வருகிறது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதேபோல் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதி அதற்கு நேர்மாறாக வெளியில் அடித்தது. அதற்கு பின் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சென்னையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மார்கழி மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது முதல் அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை கொடைக்கானல் கிளைமேட் போல் மாறியுள்ளது. இன்று காலை பனிப்பொழிவுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணியளவில் வெயில் எட்டிப்பார்த்த நிலையில் மீண்டும் சென்னை மாநகரம் முழுவதும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரனை தொடர்பு கொண்டு கேட்டப்போது, “ அதிகப்படியான மேகமூட்டம் இருப்பதாலும் லேசான தூரல் மழை இருப்பதாலும் பனிப்பொழிவு போல் தோன்றுகிறது. உண்மையில் இது பனிப்பொழிவு அல்ல” என தெரிவித்துள்ளார்.
ஆறு, ஏரி மற்றும் பனியில் இருந்து ஆவியாகும் நீர் கண்ணுக்குத் தெரியாத நீராவியாகிறது. அது தூசி, புகை போன்ற நுண் துகள்களுடன் இணைகிறது. முடிவில் நம் பார்வையை மறைக்கக் கூடிய மூடுபனி உருவாகிறது. அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சூடான நீராவியுடன் குளிர்ச்சியான காற்றின் துகள்கள் சந்திக்கும் போது பனிப்பொழிவு உருவாகிறது.
அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவமழை சென்னையில் 43% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பெய்ய வேண்டிய மழை அளவு 754.3 மி.மீ மழை, ஆனால் பெய்த மழை 1079.2 மி.மீ ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.