High Court: சட்டவிரோத விளம்பர பலகைகள்! தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 5) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத விளம்பர பலகைகள்:
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது வழக்கமாக வருகிறது.
குறிப்பாக, திருமண வரவேற்புகள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், அமைச்சர்கள் வருகை ஆகிய நிகழ்வுகளுக்கு விளம்பர பலகை வைக்கப்படுகின்றனர்.
அதிலும் அரசியல் கட்சியினர் என்றால் சொல்லவே வேண்டாம். சாலைகளை தோண்டி சாலை நடுவில் விளம்பர பலகைகள் வைப்பது. சாலை தடுப்புகள் மற்றும் சாலை வளைவுகள் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அது பல்வேறு சமயங்கள் யாரோ ஒரு சாமானியனை பலி தீர்த்து விடுகிறது.
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு
முன்னதாக, டிராபிக் ராமசாமி தொடர்ந்த சட்ட விரோதமாக விளம்பரபலகை வைத்தது தொடர்பான வழக்கு, மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியானது தொடர்பான வழக்கு என இந்த இரண்டு வழக்குகளும் இன்று (அக்டோபர 5) விசாரணைக்கு வந்தது.
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை:
வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு, யார் எல்லாம் சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கிறார்களோ அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவு, இந்த பேனர் கலாச்சாரத்தை முழுவதும் ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?
தமிழ்நாடு அரசின் இந்த வாதத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கங்கா பூர்வாலா, மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், விபத்து நடந்த பிறகு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை முழுவதுமாக தடுப்பது தான் முக்கியமானது என்று தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இதுவரையிலும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
என்பது குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.
மேலும் படிக்க: TET Teachers: தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் போட்டி; அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - டெட் ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
மேலும் படிக்க: Teachers Strike: டெட் ஆசிரியர்கள் சங்க போராட்டமும் வாபஸ்; ஆலோசனைக்குப் பிறகு முடிவு