Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Chennai Building Collapse: மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்த விழுந்ததாக கூறப்படுகிறது.
Chennai Building Collapse: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து:
மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனியார் கிளப்பில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரணம் அடைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் இருவர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவரின் பெயர் சைக்ளோன்ராஜ். இவருக்கு வயது 45.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு:
மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (23), லாலி (22) ஆகியோரும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்த விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு சென்றுள்ளது. மீட்பு பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். சம்ப இடத்தை பார்வையிட மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வேலு சென்றுள்ளார்.
சமீபகாலமாக, கட்டட விபத்துகள் அதிகரித்து வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க: Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!
தொடரும் கட்டட விபத்துகளுக்கு காரணம் என்ன?
இதில், 61 பேர் பலியாகினர்; ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல் பணிகளும் நிறுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதேபோல, வேளச்சேரியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மதுரையில் 20வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1வது தெரு பகுதியில் ரெட்டியப்பட்டியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த போது மாடிக்கு செல்வதற்கான படி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க: துணிச்சலாக செயல்பட்ட முதியவர்கள்.. பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு.. பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?