Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!
Sania Mirza: ஹைதராபாத் தொகுதியில் ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சாவை காங்கிரஸ் களம் இறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஓவைசிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்:
மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. அதற்காக, தென் மாநிலங்களில் பார்த்து, பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. ஏற்கனவே, 8 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்ற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அங்கு, 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, ஹைதராபாத் தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ஹைதராபாத் தொகுதியில் களமிறங்குகிறாரா சானியா மிர்சா?
அசாதுதீன் ஓவைசியின் கோட்டையாக ஹைதராபாத் கருதப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, ஹைதராபாத் மக்களவை தொகுதியில் ஓவைசியின் குடும்பமே வெற்றி பெற்று வருகிறது. கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தவர் சுல்தான் சலாவுதீன் ஓவைசி.
அதற்கு பிறகு, அவரின் மகன் அசாதுதீன் ஓவைசி, ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அவரை வீழ்த்த பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஓவைசிக்கு எதிராக பிரபல டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவை காங்கிரஸ் களம் இறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க சானியா மிர்சாவின் பிரபலம் தங்களுக்கு உதவும் என காங்கிரஸ் நம்புகிறது.
அசாரூதின் உறவினர்:
கடைசியாக, 1980ஆம் ஆண்டுதான், ஹைதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு, காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றி பெறவே இல்லை. சானியா மிர்சாவின் பெயரை காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
சானியா மிர்சாவும் முகமது அசாருதீனும் உறவினர்கள் ஆவர். முகமது அசாருதீனின் மகன் முகமது அசாதுதீனை சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முகமது அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) மகந்தி கோபிநாத்திடம் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.