துணிச்சலாக செயல்பட்ட முதியவர்கள்.. பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு.. பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
தென்காசியில் நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்தை வயது முதிர்ந்த தம்பதிகள் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் தவிர்த்துள்ளனர்.
இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதிகரிக்கும் ரயில் விபத்துகள்:
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது. இறப்புகள் ஏற்படாத ரயில் விபத்துகள் பல கடந்தாண்டு நிகழ்ந்துள்ளது.
ரயில் விபத்துகளை தவிர்க்க, ரயில் பாதுகாப்பு கருவிகளை நவீனமயமாக்க வேண்டும் என தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. புதிய ரயில்களை இயக்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரயில் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்காசியில் நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்தை வயது முதிர்ந்த தம்பதிகள் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் தவிர்த்துள்ளனர்.
பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
தூத்துக்குடிக்கு கேரளாவில் இருந்து ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள எஸ் வளைவுப் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரியானது எஸ் வளைவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதே சமயத்தில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் டிரக் விபத்துக்குள்ளாகி இருப்பதை புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவி குருந்தம்மாள் ஆகியோர் பார்த்துள்ளனர்.
நட்டநடு இரவில் பகவதிபுரம் ரயில் நிலையத்தை நோக்கி வரும் ரயிலை நிறுத்தி விட வேண்டும் என அவர்கள் இருவரும் ஓடிச் சென்று டார்ச் லைட் அடித்து, சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் மிகப்பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் மட்டுமே ரயில் இயக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் ரயிலை நிறுத்த தம்பதியினரின் எச்சரிக்கை உதவியது" என்றார்.
மண் அள்ளும் கருவிகளைப் பயன்படுத்தி லாரி அகற்றப்பட்டு, காலை 6 மணியளவில் போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கியது. இந்த விபத்து காரணமாக சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.