Western Ghats: தமிழ்நாட்டின் 135 கிராமங்களுக்கு ஆபத்தா: மத்திய அரசு பரபரப்பு அறிக்கை..!
Western Ghats Eco Zone: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் 56,825 சதுர கிமீ பரப்பளவானது பாதிப்புமிக்க பகுதி என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த பகுதி எனவும் தெரிந்து கொள்வோம்.
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரானது, இயற்கையின் அழகையும், பலருக்கு வாழிடத்தையும் வழங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரால், இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மழை பெறுவதற்கும் ஆதாரமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் இம்மலைத்தொடரானது பரவியுள்ளது. இந்த மலைத்தொடரானது, ஆபத்தையும் தனக்குள் வைத்துள்ளது.
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை:
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பரவியுள்ள ஆறு மாநிலங்களில், ஆபத்தான பகுதியாக கருதி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான மனித நடவடிக்கைகளைத் தடைசெய்ய/ஒழுங்குபடுத்துவதற்காக 56,825 சதுர கிமீ பரப்பளவை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி (ESA) என ஆறாவது வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு பகுதி:
கர்நாடகா – 20,668 சதுர கி.மீ
மகாராஷ்டிரா – 17, 340 கி.மீ
கேரளா – 9,993 கி.மீ
தமிழ்நாடு – 6,914 கி.மீ
கோவா – 1,461 கி.மீ
குஜராத் – 449 கி.மீ
இந்த பகுதிகளில் சுரங்கங்கள் தோண்டுவது, குவாரிகள் அமைப்பது, அணைகள் கட்டுவது, இயற்கையை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டமைப்பதை தடுக்கும் வகையில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 135 கிராமங்கள்:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்புமிக்க பகுதியாக அறிவிக்கப்பட்ட 6,914 ச. கி.மீ பரப்பளவில் தேனி கோவை, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் சுமார் 135 கிராமப் பகுதிகள் அடங்கியுள்ளன.
முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிக்குள், கேரளாவில் 9,993 சதுர கி.மீ., வயநாடு மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கியது, இதில் கடந்த ஜூலை 30 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நூல்புழா பகுதியும் அடங்கும்
கேரளம் – வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மறுநாள், இந்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், 60 நாட்களுக்குள், இந்த வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபனை மற்றும் கருத்துகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.