Wayanad landslide: வயநாட்டில் காவல் தெய்வமாக வந்த யானை..! 2 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
Wayanad landslide: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் , யானை ஒன்று இரு உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wayanad landslide: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் பலியானோரின் எண்ணிக்கை, 340ஐ கடந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சனிக்கிழமை அன்று மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. தற்போது வரை 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, நிலச்சரிவில் சிக்கிய பலர் அதிருஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்படி உயிர் பிழைத்த இருவர் தொடர்பான சம்பவம் தான் தற்போது கேட்போரை நெகிழச் செய்துள்ளது.
காவல் தெய்வமாக மாறிய யானை:
சூரல்மலையை சேர்ந்த சுஜாதா அனிநஞ்சிரா மற்றும் அவரது பேத்தி உயிர் பிழைத்த சம்பவம் தான் ஆச்சரியப்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அவர்களது வீடு தரைமட்டமானது. இருப்பினும் அதிருஷ்டவசமாக சுஜாதாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிர்பிழைத்துள்ளனர். அதேநேரம், ஒரு யானை ஒன்று தான் தன்னையும், தனது பேத்தியையும் காப்பாற்றியதாகவும் கூறி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுஜாதா என்ற மூதாட்டி.
யானை உதவியது எப்படி?
சுஜாதாவும் அவரது பேத்தியும் ஒரு கருவேல மரத்தில் பிடித்துக்கொண்டு தரையில் படுத்து, இரவை திகிலுடன் கழித்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். அதன்படி, "அன்றைய நாள் இருட்டாக இருந்தது, எங்களிடமிருந்து அரை மீட்டர் தொலைவில் ஒரு காட்டு யானை இருந்தது. அதை கண்டதும் மிகவும் அச்சத்துடன், யானையிடம் ஒரு கோரிக்கையை முணுமுணுத்தேன். நான் ஒரு பேரழிவில் இருந்து தப்பித்துவிட்டேன், எங்களை இன்று இரவு இங்கு தங்கியிருக்க அனுமதிக்கவும், யாராவது எங்களைக் காப்பாற்றட்டும் என கேட்டுக் கொண்டேன்.
நாங்கள் யானையின் கால்களுக்கு மிக அருகில் இருந்தோம், ஆனால் அது எங்கள் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டது போல் இருந்தது. காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம், காலையில் சிலர் எங்களை மீட்கும் வரை யானை அங்கேயே நின்றிருந்தது. விடிந்ததும் அதன் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்தேன். பின்பு வந்து சிலர் எங்களை மீட்டனர்” என சுஜாதா தெரிவித்துள்ளார்.
பேத்தியை காப்பாற்றிய பாட்டி
முண்டக்கை பகுதியில் உள்ள ஹாரிசன்ஸ் மலையாள டீ எஸ்டேட்டில் 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சுஜாதா, தனது வீட்டில் மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன்கள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். தொடர்கனமழையால் அவரது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. அனைவரும் படுக்கையின் மீது அமர்ந்திருக்க, பெரிய மரக் கட்டைகள் மோதி வீடு தரைமட்டமாகியுள்ளது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவரது மகள் பலத்த காயமடைந்தார். இடிந்து விழுந்த சுவரில் இருந்து சில செங்கற்களை அகற்றிவிட்டு சுஜாதா வெளியே வந்து தப்பித்துள்ளார். தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததை கேட்டது, தேடி சிறுமியின் விரலைப் பிடித்து வெளியே இழுத்து மீட்டுள்ளார்.