முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. பயிர் பாதிப்பை கணக்கிட விரையும் மத்திய குழு
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பயிர் சேதத்தை கணக்கிட மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
மத்திய அரசின் ஆய்வுக்குழு
இதுதொடர்பான அறிக்கையில், ”தமிழ்நாடு அரசிடம் இருந்து நெற்பயிர் சேதம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதத்தின் அடிப்படையில், ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ். பிரபாகரன் என்பவரது தலைமையிலான இந்த குழுவில் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவானது தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை சேகரித்து உடனடியாக ஆய்வு செய்து, அதுதொடர்பான முடிவுகளை உடனடியாக மத்திய உணவு அமைச்சகத்திற்கு அனுப்பும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் பாசன வாய்க்கால்களை துரிதமாகத் தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து உள்ள முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுடி பரப்பு அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் 16.43 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு சம்பா/ நவரை பயிரின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்..
கடந்த காலங்களில், குறுவை பருவத்தில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ். மாநில கொள்முதல் முகமையான. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதல் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளை தளர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது. அதன் மூலம் நெல் கொள்முதல் பணிகளை சீராக செய்து முடிக்க இயலும்.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த. நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறும், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.