Cauvery Issue: 'கர்நாடகா மக்கள் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய லாரிகளை எதுவும் செய்ய வேண்டாம்' - மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
கர்நாடகா அரசு தமிழகத்தில் இருந்து வரக்கூடிய லாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சம்மேளனம் மாநிலத் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சனை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இடையே இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலம் சென்று கொண்டிருந்த லாரிகளை பெங்களூரு அருகே ஐந்து, ஆறு லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதன் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நதிநீர் பிரச்சனை என்பது இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனையாகும். இதனை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சுமூக கையாண்டு வருகின்றனர். இது நல்ல விதமாக முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் லாரிகள் தமிழகத்தில் இருந்து காஷ்மீர் வரை சென்று வருகிறது. லாரி தொழில் என்பது பொதுவான தொழில், கர்நாடகா மக்கள் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய லாரிகளை எதுவும் செய்ய வேண்டாம்.
தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் லாரி ஓட்டுனர்களும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் லாரி ஓட்டுனர்களும் சகோதரர்கள். எனவே தமிழகத்திலிருந்து வரக்கூடிய லாரிகளை சேதப்படுத்துவதை கர்நாடகா மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேபோன்று கர்நாடகா அரசு தமிழகத்தில் இருந்து வரக்கூடிய லாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கர்நாடகா அரசியல் நம்பி தான் லாரிகள் கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு சென்று வருகிறது. எனவே கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கும் கர்நாடகா அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்று கர்நாடகா மக்கள் தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய லாரிகளை தாக்குவதால் அங்கு செல்ல வேண்டிய பொருட்கள் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அங்கிருந்து வரக்கூடிய பொருட்கள் அங்கும், இங்கிருந்து செல்லக்கூடிய பொருட்கள் இங்கும் நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும். இரண்டு அரசுகளும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை. எனவே தயவு செய்து தமிழகத்திலிருந்து வரக்கூடிய லாரிகளுக்கு கர்நாடகா பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய லாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
கர்நாடகா அரசு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் லாரிகளும், அதேபோன்று கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகளும், கர்நாடகா வழியாக தமிழ்நாடு திரும்பும் லாரிகளும் பாதுகாப்பான இடத்தில் கர்நாடகா மாநில எல்லைகளில் நிறுத்தப்பட வேண்டும். லாரி ஓட்டுனர்களும் லாரிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நமது லாரிகள் முக்கியம் எனவே லாரி உரிமையாளர்கள் உடனடியாக லாரி ஓட்டுநர்களுக்கு தொடர்பு கொண்டு இந்த செய்திகளை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் லாரிகள் கர்நாடகா மாநிலம் சென்று வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் லாரிகள் கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அவர்களும் உரிய பாதுகாப்புடன் தமிழகம் திரும்புவதை லாரி உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திலிருந்து செல்லக்கூடிய லாரிகள் மீது தாக்குதல் நடத்துபவர்களை கர்நாடகா அரசு கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.