மக்களுக்கு உதவ தயாராகுக: பாஜக தலைவர் எல் முருகன் அறிக்கை.
கொரோனா காலத்தில் பாஜக மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் திரு. டாக்டர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‛‛கொரோனா காலத்தில் பாஜக மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் திரு. டாக்டர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'கொரோனாவின் முதல் அலை பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகச் சிறப்பாக பணியாற்றியதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உணவு வழங்குதல், முக கவசம் வழங்குதல், மோடி கிட் என்று சொல்லக்கூடிய உணவு பொருட்கள் வழங்குதல், ஆங்காங்கே மோடி கிச்சன் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குதல், போன்ற பல்வேறு பணிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றினோம். களத்தில் மக்களோடு நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். இடையில் தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்து மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் பல முக்கிய கடமைகளை நாம் ஆற்ற வேண்டி இருக்கிறது.'
தடுப்பூசி போடுவதற்கு வழிகாட்டுவது, கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்குவது, வழிகாட்டு உதவி மையங்கள் அமைப்பது, பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுவது. அனைவருக்கும் முக கவசங்களை வழங்குவது என முக்கியமான பணிகளில் மக்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டுகிறேன்.
'பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களின் சேவை மனப்பான்மையை மீண்டும் மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுகிறேன். பாரதப் பிரதமர் அவர்கள் பாதிப்பிலிருந்து நம் நாடு முற்றிலும் விடுபட பல்வேறு பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் வகையில் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை கடந்து இணைந்து செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'.
'தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுவதுமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரானா தொற்று குறைந்திட ஒவ்வொருவரும் ஒத்துழைப்பை நல்கிட என்றும் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவிப்பில் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கொரோனா பரவல் காலத்தில் பாஜகவினர் ஆற்றிய பணிகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றதாக நம்பும் முருகன், எந்த பிரதிபலனும் இல்லாமல் பாஜவினர் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் , அதற்கான அரசியல் வேறுபாட்டை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முருகன் முன்வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய பிரதமரின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் அவரது அறிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் தமிழக மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.