Bihar Election: முதலமைச்சரை ஓரங்கட்டத் துடிக்கும் பாஜக.. முடிவுக்கு வருகிறதா நிதிஷ் சாம்ராஜ்யம்?
பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் சம அளவில் தொகுதியை பங்கீடு செய்திருக்கும் பாஜக நிதிஷ்குமாரை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முக்கியமான மாநிலம் பீகார். தற்போது நிதிஷ்குமாரின் ஆட்சி அங்கு நடைபெற்று வரும் சூழலில், அவரது ஆட்சிக்காலம் இந்தாண்டுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பீகாரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் யார்?
மத்திய அரசின் பாஜக ஆட்சிக்கு முக்கிய பக்கபலமாக திகழும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிளிலும் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் பாஜக பீகாரில் மிகப்பெரிய அளவு வளர்ந்துள்ளது. அதன் எதிரொலியாகவே ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடன் சம அளவிலான தொகுதிப் பங்கீட்டில் பாஜக களமிறங்கியுள்ளது. இந்த சூழலில், அமித்ஷா முதலமைச்சர் யார்? என்பதை தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
ஓரங்கட்டப்படுகிறாரா நிதிஷ்குமார்?
அமித்ஷாவின் இந்த கருத்து ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இது நிதிஷ்குமாரை ஓரங்கட்டும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை நிதிஷ்குமாருக்கு பெரியளவு முக்கியத்துவம் அளிக்காத பாஜக, ஆட்சியைக் கைப்பற்ற அவரது பங்கு மிக மிக அவசியம் என்பதால் அவருக்கும், பீகாருக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டம்:
அதேசமயம், பீகாரை தங்கள் வசம் கொண்டு வரவும் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று, ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால் நிதிஷ்குமாரை ஓரங்கட்டவும் பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு நடந்தால் 74 வயதான நிதிஷ்குமாருக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், அவ்வாறு நடந்தால் மத்தியில் ஆட்சியில் முக்கியத்துவத்துடன் உள்ள நிதிஷ்குமாரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று பாஜக கருதுகிறது.
என்ன செய்யப்போகிறார் நிதிஷ்?
முதலமைச்சர் பதவிக்காக லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரியா ஜனதாள தளத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டவர், பின்னர் பாஜக-வின் கூட்டணிக்கு மாறியவர் என நிதிஷ்குமார் மீது ஏற்கனவே பல விமர்சனங்களும் உள்ளது. மேலும், சமீபத்திய ஆட்சியிலும் பாலங்கள் இடிந்து விழுந்தது என சரமாரியாக விமர்சனங்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அவர் மீது மாநிலத்தில் உள்ள அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே பாஜக 101 தொகுதிகளில் களமிறங்குவதையும் காண முடிவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் எதிரொலியாகவே நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டாலும் முதலமைச்சர் யார்? என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று பேசியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறி அவர்களுக்கு எதிர்மறையாக அமைய வாய்ப்பு உள்ளது. அமித்ஷாவின் பேச்சைத் தொடர்ந்து தங்களது தொகுதிகளில் கூடுதல் கவனத்தை ஐக்கிய ஜனதா தளம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார் அந்த மாநிலத்தில் 18 வருடங்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர்.





















