Savukku Shankar Vs G-Square : ”கருணையுடன் மன்னிக்கவும்!” சரண்டரான சவுக்கு G-ஸ்கொயரிடம் பணிந்த பின்னணி
இனி ஜி-ஸ்கொயர் பற்றி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ இருந்தால், அந்த நிறுவனத்தாரிடம் பேசி விளக்கம் பெறாமல் எதுவும் செய்யமாட்டேன் என சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய அவதூறு கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும்.. நீதிமன்றம் தாழ்மையுடன் தான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, தன் மீது கருணை காட்டி மன்னிக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
இது குறித்து அவர் கோர்ட்டில் பணிவுடன் பதிவு செய்த மன்னிப்பு கோரும் மனு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், சவுக்கு சங்கருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களை பற்றி சவுக்கு பேசிய பொய் கருத்துகளை நம்பி, வாடிக்கையாளர்கள் 28 பேர் – தங்கள் நிறுவனத்தில் வீடு வாங்க செய்திருந்த முன்பதிவை கேன்சல் செய்துவிட்டதாகவும், இதனால் தங்கள் நிறுவனத்துக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் இனி சவுக்கு சங்கர் ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றி பேட்டிகளில் பேச தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனை மீறி 20 நாட்களுக்கு முன்பு ஆதன் தமிழ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் மீண்டும் ஜி ஸ்கொயர் பற்றி அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஏற்கனவே அவதூறு வழக்கில் சிறை சென்று வந்துள்ள சவுக்கு, வார்த்தைகளை திரும்பப்பெறமாட்டேன் – மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றெல்லாம் வீரமாக பேசிவந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் சாஷ்டாங்கமாக பணிந்து திடீர் மன்னிப்பை கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மன்னிப்பில் அவர்,
"ஆதன் தமிழ்" என்ற Youtube சேனலுக்கு அளித்த பேட்டியிலும், 31.10.2023 தேதியிட்ட ட்வீட்டிலும் ஜி ஸ்கொயர் குறித்த தரவுகளை சரிபார்க்காமல் கருத்து வெளியிட்டதற்காக இந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் நான் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஜி-ஸ்கொயர் பற்றி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ இருந்தால், அந்த நிறுவனத்தாரிடம் பேசி விளக்கம் பெறாமல் எதுவும் செய்யமாட்டேன்.
நான் அவர்களை பற்றி எழுதியவற்றை டெலிட் செய்துவிட்டேன். எனவே இந்த நீதிமன்றம் தாழ்மையுடன் நான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, கருணையுடன் என் தவறை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் என்ன சவுக்கு இப்படி மட்டையா மடிஞ்சிட்டீங்க என்று சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர்.