Anna Birthday: அண்ணாவின் எளிமையும், அவர் சேர்த்த பெருஞ்சொத்தும்..!
அண்ணா அப்போதே எம்.ஏ படித்தவர். ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். ஆனால் அண்ணாவின் ஆங்கிலப்புலமை பலருக்கும் தெரியாது.
தமிழ்நாடு தன் வரலாற்றில் எத்தனையோ தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் அண்ணா அளவிற்கு மக்களை ஈர்த்த, மக்களுக்காக உழைத்த, மக்களுக்காகவே வாழ்ந்த, மக்களுக்காகவே அரசாண்ட ஒரு தலைவனை பார்த்திருக்காது. பெரியாரின் மாணவனாக இருந்து முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சரானது வரை தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் பணியாற்றியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அண்ணா சொத்து சேர்த்த அளவிற்கு உலகில் வேறு யாரும் சேர்த்திருக்கமாட்டார்கள். அந்த சொத்து கோடிக்கணக்கான மக்களின் அன்பு என்ற சொத்துதான். அந்த சொத்தை அளவிடுவதற்கு இதுவரை எந்த கால்குலேட்டரும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக அரசியல் இலக்கணத்திற்கு எளிமையை ஒரு காரணியாக குறிப்பிடுவார்கள். அப்படி எளிமையாக வாழ்ந்தவர்கள் என்று கக்கன், காமராஜரை தான் இப்போதும் மக்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் காமராஜரையும் மறந்துவிடக்கூடாது. ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக இருந்தபோதும் சரி அண்ணாவின் அடையாளம் அவரது எளிமைதான்.
கசங்கிய சட்டை, வாறப்படாத தலை, அழுக்கு வேட்டி, புகையிலை கறைபடிந்த துண்டு இதுதான் அண்ணா. இதுதான் அவரது அடையாளம். கையில் ஒரு மோதிரம், வாட்ச் என்று எதையும் அணியாதவர். வசதிகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். பகட்டான வாழ்வை புறம் தள்ளியவர் என்று அண்ணாவின் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வார்த்தைகளில் சொல்வதை விட சில சம்பவங்கள் மூலம் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
கவிவேந்தர். கா. வேழவேந்தர் திருமணம் அண்ணா தலைமையில் நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. அண்ணாவிற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால், அண்ணா வந்தபாடில்லை. சிறிது நேரத்தில் லாரி ஒன்று நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வருகிறது. லாரியிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் அண்ணா. எல்லோருக்கும் மகிழ்ச்சி அதே சமயத்தில் அண்ணா ஏன் லாரியில் வருகிறார் என்று அதிர்ச்சியும் கூட. அண்ணா காஞ்சிபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும் வழியில் கார் பழுதாகியிருக்கிறது. உடனடியாகப் பழுது பார்ப்பதற்கான வசதி கிடையாது. ஆனால், வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். எல்லோரும் காத்திருப்பார்கள், அங்கு எப்படி செல்வது என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி, நிலமையை ஓட்டுநரிடம் சொல்ல, அந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் ஓட்டி அண்ணாவை சென்னை அழைத்து வந்திருக்கிறார். திருமணமும் சொன்னது போன்றே அண்ணா தலைமையில் நடைபெற்றிருக்கிறது. வேறு எந்த தலைவரையாவது இப்படி பார்த்ததுண்டா. தலைவர் கிளம்புகிறார் என்றால் முன்னாடி பத்து கார் பின்னால் பத்துகார் அணிவகுக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு தலைவரை பார்க்கத்தான் முடியுமா?
அண்ணா தன் உடை குறித்து அலட்டிக்கொள்ளமாட்டார். ஒரு சட்டையை இரண்டு மூன்று முறை அணிவார். வேட்டியை சாதாரணமாக கட்டுவார். மறுநாள் மேல் தலைப்பு கீழாகவும், கீழ்தலைப்பு மேலாகவும் கட்டுவார். அடுத்தநாள் உள்பக்கத்தை வெளிப்பக்கம் வைத்து கட்டுவார். இது தான் அண்ணா. அண்ணாவின் எளிமையை பல பேர் பல தருணங்களில் கிண்டலடித்திருக்கின்றனர். அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆகியிருந்த சமயம். “கசங்கிய வேட்டி, சட்டையோடு இந்த ஆள் போனா டெல்லிக்காரன் தமிழனை பார்த்தாலே சிரிப்பான்” என்று மதுரையில் அண்ணாவை கேலி செய்து பேசியிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். அதனைக் கேட்ட அண்ணாவின் தம்பிகள் இருவருக்கு வருத்தமாகிவிட்டது. உடனடியாக மதுரையில் உள்ள “பாம்பே டெய்லர்ஸில்” கோட் சூட் தைப்பதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டிருக்கின்றனர். 200 ரூபாய் என்று அவர்கள் சொல்ல, நகையை அடகு வைத்து இருவரும் ஆளுக்கு நூறு ரூபாய் தேற்றியிருக்கிறார்கள். பின்னர் திருச்சியில் இருந்த அண்ணாவிடம் அளவெடுத்து கோட் சூட் தைத்து கொடுத்திருக்கிறார்கள். கோட் சூட் இருக்கிறது. ஆனால், போட்டுக்கொள்ள ஷூ இல்லை என்பதை அறிந்து, அதையும் வாங்கிக்கொண்டு போய் கொடைக்கானலில் இருந்த அண்ணாவிடம் கொடுத்திருக்கிறார்கள். அண்ணாவின் எளிமையை கிண்டல் செய்தால் மற்றவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியாத அளவிற்கு வாழ்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சர்யம்.
அண்ணா அப்போதே எம்.ஏ படித்தவர். ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். ஆனால் அண்ணாவின் ஆங்கிலப்புலமை பலருக்கும் தெரியாது. மாநிலங்களவை உறுப்பினராகி அவைக்குச் செல்கிறார் அண்ணா. அப்போது அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட, உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார் அருகில் இருந்த மற்றொரு உறுப்பினர். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் அண்ணா. அண்ணாவின் கன்னிப்பேச்சைக் கேட்ட மொத்த அவையும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த அவையில் பிரதமர் நேருவும் இருந்தார். அவைத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணணும் அண்ணாவிற்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பதை மறந்துவிட்டார். நேரம் முடிந்துவிட்டது என்று பின்னர் சொல்ல, பேசட்டும் விடுங்கள் என்று நேரு தடுக்க, அரை மணிநேரம் கூடுதலாகப் பேசினார் அண்ணா. அண்ணா ஆங்கிலத்தில் கரை தேர்ந்தவராக இருந்தாலும், அதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவுள்ளவராக இருந்தார். தமிழ்- தெரிந்தவர்களிடத்தில் தமிழில்தான் பேசுவார். எங்கு ஆங்கிலம் பேச வேண்டுமோ அங்கு ஆங்கிலம் பேசுவார். இது தான் அண்ணா.
இவை எல்லாம் சிறுதுளிகள் தான். அண்ணாவின் பண்புகளை தனித்தனியே எடுத்து எழுனால் பக்கங்கள் நீளும், பேசினால் நாட்கள் போதாது. ஒரு மனிதனுக்கு எளிமை இருந்தால் போதுமா? தலைமைப் பண்பு வேண்டாமா என்று கேட்கலாம். ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதை சாமானிய மக்களுக்கான இயக்கமாக வடிவமைத்தவர் அண்ணா. தான் கை காட்டும் இடத்தில் பாயும், கண் அசைத்தால் தீக்குளிக்கும் அளவிற்கு உக்கிரமான தொண்டர்களை வைத்திருந்தவர் அண்ணா. ஆனாலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று வார்த்தைகளில் கட்டுக்கோப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தியவர். தனக்குப் பின்னும் தமிழ்நாட்டை வழிநடத்த தலைவர்களை உருவாக்கிச் சென்ற ஆளுமை.
அண்ணாவின் சகாப்தத்துக்குள் நுழைவது என்பது ஆச்சரியங்களுக்குள் நுழைவது; தமிழ்நாட்டில் அண்ணா அளவுக்கு எல்லா தரப்பினராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்கு நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்குக் கொண்டாடப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்கு மக்களிடத்தில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஒரு தலைவர் கிடையாது. அண்ணா என்பது ஒரு மனிதரல்ல. அது ஒரு வாழ்வியல். அது ஒரு பாடம்.