Anbumani Ramadoss : "மின் இணைப்பு எண்-ஆதார் இணைப்பில் குழப்பம் : மின்சார வாரியம் விளக்கமளிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மின் இணைப்பு எண்ணுடன் அதார் எண் இணைக்கும் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் அதார்
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2023 பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் எண் உடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தில் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதால் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டிருப்பதாக மின்வாரியம் கவலை என தகவல் வெளியாகியுள்ளது.
பாமக வலியுறுத்தல்
இதனை அடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, ”தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவையாகும். போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன? என்பதை தெரிவிக்காமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவு தான் இதுவாகும்" என்றார்.
மேலும், ”மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைப்பதில் எத்தகைய குழப்பங்கள் நடந்துள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்? அதை மின்வாரியம் எவ்வாறு சரி செய்யப்போகிறது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்".
மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4)@TANGEDCO_Offcl @CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 6, 2023
”மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.