ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஏஸ் நியமனம்: மேலும் பலருக்கு புதிய பொறுப்பு!
மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஏஸ் சமீபத்தில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு தமிழ்நாடு அரசு பதவி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் முதன்மை செயலாளராக அமுதா ஐஏஏஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியில் இருந்து சமீபத்தில் மாநில அரசு பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு தமிழ்நாடு அரசு பதவி வழங்கியுள்ளது. தொழிற்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை முதன்மை செயலராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
கோபால் ஐஏஎஸ் போக்குவரத்து துறை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி துறை முதன்மை செயலராக ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபூர்வா ஐஏஎஸ் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக தயானந்த் கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறி மற்றும் துணி நூல், கதர் துறை முதன்மை செயலராக தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை செயலராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் - தமிழ்நாடு அரசுhttps://t.co/wupaoCQKa2 | #AmudhaIAS | #TNGovt | #IAS pic.twitter.com/4c9JUqc8as
— ABP Nadu (@abpnadu) November 6, 2021
யார் இந்த அமுதா ஐஏஎஸ்?
மதுரையைச் சேர்ந்த 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா களத்தில் இறங்கி வேலை செய்வதற்காகவும் துணிச்சலான முடிவுகளை எடுத்ததற்காகவும் பெயர் பெற்றவர். 1990களின் பிற்பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் ராஜ்ஜியம் இருந்தபோது சத்தியமங்கலத்தின் அடர்ந்த காடுகளுக்குள் சென்று அங்குள்ள உள்ளூர் மக்களை சந்தித்து பேசி அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார் துணை ஆட்சியராக இருந்த அமுதா ஐஏஎஸ்.
சென்னை பெருவெள்ளம்
2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது இவரது களப்பணிகள் பரவலாக பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது பெருவெள்ளத்திற்கு காரணமான நீர் செல்லும் வழிகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்கச் சொல்லி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
மணல் கொள்ளைத் தடுப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார். அப்போது மணல் கொள்ளையர்களைப் தடுக்கச் சென்றபோது அமுதாவை மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று இடித்து தள்ளிவிட்டுச் சென்றது. அதில் படுகாயமடைந்தார் அமுதா. தொடர்ந்து இவருக்கு பல மிரட்டல்களும் வந்துள்ளன. அதற்கெல்லாம் அஞ்சாமல் பல மணல் கொள்ளை லாரிகளைப் பறிமுதல் செய்தார்.
பெண்களை ஊக்கப்படுத்திய அமுதா ஐஏஎஸ்
மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபோது பெண்களை சுய உதவிக்குழுக்களில் ஆர்வத்தோடு பங்கேற்க செய்ததோடு பெண்கல்வியையும் ஊக்குவித்தார். அதன் மூலம் தர்மபுரியில் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்தது. படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளைத் தேடிச்சென்று மீண்டும் கல்வி கற்க வைத்தார். அங்கு பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அங்குள்ள பெண்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தார். இதை பல்வேறு தருணங்களில் நினைவுகூர்ந்து அப்போது தான் எவ்வளவு திருப்தியாக உணர்ந்தேன் என அவரே சொல்லியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு
பல சவால்களுக்கு மத்தியின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வை சென்னை மெரினாவில் அமுதா ஒருங்கிணைத்தது அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. முதலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க மறுப்பு தெரிவித்த அதிமுக அரசு உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அனுமதி வழங்கியது. கருணாநிதிக்கு இறுதிச் சடங்கு மெரினா கடற்கரையில்தான் நடக்க போகிறது என்பது வெறும் 5 மணி நேரத்திற்கு முன்புதான் அமுதா ஐஏஎஸ்ஸிடம் கூறப்பட்டது. இதனிடையே லட்சக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அமுதா ஐஏஎஸ்க்கு மிகக்குறுகிய காலம்தான் இருந்ததது. மாலை 5 மணிக்குள் மிகச்சிறப்பாக அந்த இடத்தை தயார்படுத்தினார் அமுதா. தேசியத் தலைவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பங்கேற்ற அந்த நிகழ்வில் எந்த பிரச்சினையும், சலசலப்பும் ஏற்படாமல் கூடிநின்ற அனைவரையும் ஒருங்கிணைத்து மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அந்த சமயத்தில் கருணாநிதி உடலின் நல்லடக்கத்திற்காக அவரது குடும்பத்தினர் மணலை எடுத்துப்போட்டபோது அமுதாவும் அந்த இறுகிய சூழலுக்கு மத்தியில் ஒரு பிடி மணலை அள்ளிப்போட்டார். அது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணிகளையும் திறம்பட செய்து முடித்தார் அமுதா.
அடையாளம் கண்டுகொண்ட பிரதமர் அலுவலகம்
உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக இருந்த நேரத்தில், விதிமுறைகளை மீறிய பல்வேறு உணவகங்களுக்கு சீல் வைத்தார் அமுதா. உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியர் சிறப்பாக பணியாற்றினார் அமுதா. இவரது திறமையைக் கண்டு கடந்த ஆண்டு இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தனிப்பட்ட குடும்பம்
அமுதாவின் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவருடைய அப்பா மத்திய அரசு ஊழியர். கணவர் ஷம்பு கலோலிகரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவருடைய அண்ணன் குமரன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்