முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் ஏன்? - காவல்துறை விளக்கம்
’’2006 ஆம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது’’
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. திண்டிவனம் தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.வி.சண்முகம், பா.ம.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8.9.2006 அன்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு உட்கார்ந்திருந்தார்.
அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர், அங்கு நின்ற காருக்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலை செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க.வை சேர்ந்த 21 பேர் மீது, சி.வி.சண்முகம் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய 6 பேரின் பெயரை நீக்கி விட்டு, ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிவி சண்முகம் புகாரின் படி, ரோஷணை போலீசார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், ராமதாஸ், அன்புமணி ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டு, மற்றவர்கள் மீது விசாரணை நடந்து வந்தது. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் நீக்கப்பட்டதை எதிர்த்தும், சி.பி.ஐ., விசாரிக்க கோரியும் சண்முகம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, 2012 ஆம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிவி சண்முகம் வீட்டிற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் வெளியே சென்றால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னும் இந்த பாதுகாப்பு தொடர்ந்தது. இந்நிலையில், அக்டோபர் 29 ஆம் தேதியில் இருந்து, சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. முருகானந்தம் கொலை வழக்கு வரும் 19 ஆம் தேதி, திண்டிவனம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில், சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது மாநில பாதுகாப்பு ஆணையம் எடுத்த முடிவின்படி யாருக்கெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பது குறித்து ஆய்வு செய்து எடுத்த முடிவின் அடிப்படிடையிலேயே சி.வி.சண்முகத்திற்கு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.