Ayudha Pooja: 7 லட்சம் பேர் பயணம், சந்தைகளில் குவியும் மக்கள்! களைகட்டத் தொடங்கிய ஆயுதபூஜை கொண்டாட்டம்!
Ayudha Pooja: ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ள நிலையில், சந்தையில் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
Ayudha Pooja: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு, 7 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
7 லட்சம் பேர் பயணம்:
வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வரும் மக்கள், சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இதனால், ரயில்கள் மற்றும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் நிரம்பி வழிந்தன. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் பொதுமக்கள் பயணங்களை மேற்கொண்டதால், பல்வேறு முக்கிய இணைப்புச் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தைகளில் குவியும் மக்கள்:
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய மங்களகரமான நாட்கள் வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளனர். அவல், பொரி, கடலை, பூசணிக்காய், வெற்றிலை, தேங்காய், பழங்கள், தோரணம், மாங்கொத்து, எலுமிச்சை மற்றும் மஞ்சள் போன்ற பூஜைப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பூசணியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைக்கன்றும் பல லாரிகளில் கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆந்திரா, திருவள்ளூர், சேலம் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. நேரம் செல்ல செல்ல கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள முக்கிய சந்தைகளிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற முக்கிய பகுதிகளான திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய பகுதிகளிலும் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விற்பனை களைகட்டி வருகிறது.
விலை விவரங்கள்:
இதனிடையே தேவை அதிகரித்து இருப்பதால் பூ மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் சாமந்தி பூ -ரூ.200-க்கும், அரளி-ரூ500, ஜாதி-ரூ.450,முல்லை-ரூ.600, சம்பங்கி- ரூ250, பன்னீர் ரோஜா-ரூ.150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ.250, மல்லி மற்றும் கனகாம்பரம்- ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில்லறை பூ விற்பனையிலும் விலை உயர்ந்துள்ளது.
பழங்களை பொருத்தவரையில், ஆப்பிள்-ரூ.200, சாத்துக்குடி-ரூ.100, மாலூர் கொய்யா-ரூ.150, மாதுளம் பழம்-ரூ.250, வாழை இலை ஒன்று-ரூ.10, வாழைக்கன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ.100. பூசணிக்காய் (1கிலோ)-ரூ.10, எழுமிச்சை கிலோ ரூ.120, தோரணம் - ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15, வெற்றிலை கவுளி -ரூ.40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று - ரூ.500, அவல் ஒரு படி- ரூ.100, பொரி ஒரு படி-ரூ.20, கடலை ஒரு படி-ரூ.150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ ரூ.100, தேங்காய் ஒன்று ரூ.25வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.