Drones Ban: நாளை முதல் சென்னையில் டிரோன் பறக்கத் தடை; என்ன காரணம்?
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் பகுதிகளில் நாளை (ஜூலை 23) முதல் மூன்று நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் பகுதிகளில் நாளை (ஜூலை 23) முதல் மூன்று நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து ஜி20 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இவை ஆண்டுதோறும் சர்வதேச பொருளாதாரம், நிதி நிலைமை, பருவநிலை மாறுபாடு, நாடுகளின் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனைகளை நடத்தும். மேலும், நாடுகளின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 9,10 தேதியில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பேரிடர் அபாயத்தை குறைக்க புதிய பணிக்குழுவை இந்தியாவின் தலைமையில் ஜி 20 நாடுகள் அமைத்துள்ளன. அதன் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்கள் மும்பை மற்றும் காந்தி நகரில் நடந்த நிலையில், மூன்றாவது கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் வரும் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜி20 மாநாட்டை ஒட்டி, நாளை முதல் 26ம் தேதி வரை சென்னையிலும், மாநாடு நடைபெறும் பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஜி20 மாநாட்டை ஒட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. ஜி-20 மாநாட்டு கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என தொடர்புடைய துறைகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.