மேலும் அறிய
மருத்துவமனையிலும் ஸ்டாலின் டேபிள் மீட்டிங் நாடகம்... காரைக்குடியில் கொந்தளித்த இபிஎஸ்
பருவ மழை பெய்கிறது, நெற்பயிர் நடவு செய்யும் காலம். கடன் வாங்கும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள் - ஈ.பி.எஸ் பேச்சு.

ஈ.பி.எஸ்
Source : whats app
திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது, தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்குமா இல்லையா என்ற சூழல் நிலவுகிறது - காரைக்குடியில் ஈ.பி.எஸ் பேச்சு.
காரைக்குடியில் ஈ.பி.எஸ்.,
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தின் 2-ஆம் கட்டமாகத் தொடங்கியிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மக்களை நேரில் சந்தித்தார். காரைக்குடி, செக்காலை பகுதியில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது.., ‘ கரைக்குடி மாநகராட்சியிலும் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. இங்கிருக்கும் மேயர் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை குறைந்த வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டுள்ளார். அவர் பொறுப்புக்கு வந்ததே கொள்ளையடிக்கத்தான். மேயர் தன்னிச்சையாக மாநகராட்சி தீர்மானம் இல்லாமலேயே 30 கோடி ரூபாய்க்கு வேலை ஒதுக்கியிருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
உரிமைத் தொகை தேர்தலுக்காக
திமுக 525 அறிவிப்புகள் கொடுத்தனர். அதில் 10% மட்டுமே நிறைவேற்றினார்கள். அது கூட முழுமையாக மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. எப்போது பார்த்தாலும் 1000 ரூபாய் பற்றியே பேசுகிறார்கள். ஆனால், அதையே 28 மாதம் கழித்துத்தான் கொடுத்தனர். அதுவும் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் கொடுத்தனர். திமுக இப்போது மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. தொண்டர்கள் செல்வாக்கையும் இழந்துவிட்டது. அதனால் இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கிறார்களாம், இன்னும் 8 மாதம்தான் இருக்குது. மக்களின் கஷ்டத்தை எண்ணி உரிமைத் தொகை கொடுக்கவில்லை, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவே இப்போது அறிவித்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல்.
யார்தான் ஐடியா கொடுக்கிறார்
ஜூலை 16ம் தேதி நோட்டீஸ் விட்டார்கள். கிராமத்து தோட்டத்தில் அனுமதியில்லாமல் வீடு கட்டினால் சீல் வைப்பார்களாம். டீ கடை முதல் அனைத்து தொழிலுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். நாங்கள் பொய் பேசவில்லை, பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்தக் கொடுமை எங்காவது உண்டா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை எல்லாவற்றுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். யாரால் தாங்க முடியும்? யார்தான் ஐடியா கொடுக்கிறார். கிராம மக்கள் என்ன தப்பு செஞ்சாங்க. அப்புறம் சிசிடிவி பொருத்தணுமாம். ஒரு கேமராவின் செலவுதான், கடையின் முதலீடாக இருக்கிறது. ஏழைகளைப் பாதிக்கும் அளவு மோசமான சட்டம் கொண்டுவந்த அரசு இனியும் தொடர வேண்டுமா?
மருத்துவமனையில் மீட்டிங்
ஸ்டாலினுக்கு உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அங்கேயே டேபிள் வைத்து மீட்டிங் போடுகிறார். 18 நாள் வெளிநாடு போய் சைக்கிள் ஓட்டிய நேரத்தில் ஏன் அரசுப் பணியை கவனிக்கவில்லை? மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். மக்கள் இதற்கு மயங்க மாட்டார்கள். வெளிநாட்டுக்குப் போய், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபரை அழைத்து அங்கு வைத்து ஒப்பந்தம் போடுறார். இப்படிப்பட்ட முதல்வர் நாட்டுக்குத் தேவையா?
விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர்
பருவ மழை பெய்கிறது, நெற்பயிர் நடவு செய்யும் காலம். கடன் வாங்கும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள். விவசாயிகள் கேட்டுக்கொண்டதால் நான் பிரதமருக்குக் கடிதம் கொடுத்தோம். உடனே, ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என்று திமுக அரசு சிபில் ஸ்கோர் நிபந்தனையை ரத்து செய்துவிட்டது. 2026 தேர்தலில் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அதிமுக ஆட்சி 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி என்கிறார் ஸ்டாலின். ஆனால் பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது, தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்குமா இல்லையா என்ற சூழல் நிலவுகிறது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















