பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி - அதிரடியாக தூக்கியடித்த இபிஎஸ்
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அதிமுக வட்டச்செயலாளர் ப.சுதாகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் அவர்களை தாக்கியதாகவும் சிறுவன் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதை வீடியோவாகவும் வெளியிட்டனர். இதைப்பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்பொது விசாரணையில் போலீசாரின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி அடைவதாக நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சென்னை காவல்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் போலீசாரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து தமிழக காவல்துறையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு உதவி செய்ததாக அதிமுக வட்ட செயலாளர் சுதாகரையும் வழக்கை முறையாக விசாரிக்காத மகள்ரி காவல் நிலைய ஆய்வாளர் ராஜியையும் சிறப்பு புலானாய்வுக் குழு நேற்று கைது செய்தது.
இந்நிலையில், அதிமுக வட்ட செயலாளர் சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சுதாகம் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.