Tamil actor Vivek passes away : நேத்து கூட டிவில பாத்தனே என கண்ணீர் விட்ட ஆனந்த்ராஜ்
Actor Vivek Death : ஒரு தனிமனிதனாக என்னால் இந்த வலியை உணர முடிகிறது, ஏனெனில் கடந்த ஆண்டு எனது தம்பியை இழந்தேன், அதே போல் இப்போதும் எனக்கு வலி இருக்கிறது, நாம் வருந்தலாம், இரங்கல் தெரிவிக்கலாம் ஆனால் அது போதுமா ? என நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்
நடிகர் ஆனந்தராஜ் விவேக் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்த போது “ என்னவென்று கூறுவது, இது நடந்ததா என சிந்திக்க கூட முடியவில்லை, மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டும் என ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்து எடுத்துக் கொண்ட மனிதர், அவருக்கு இந்த நிலையா ?
அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். சில நாள்கள் முன்பு நட்பு ரீதியாக அவரை வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அபோது அவரது மனைவி எனக்கு காபி கொடுத்து வரவேற்றார். அவரது மகள்களை சந்தித்தேன். அவர்கள் என்ன படிக்க வேண்டும், அவர்களது விருப்பம் என்ன என்பதெல்லாம் குறித்து என்னிடம் பேசினார்.
தனது மகனின் புகைப்படத்தை காட்டினார், அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். சமீபத்தில் வெளிவந்த தம்பி விஜய் படமான பிகில் படத்தில் கூட நாங்கள் இணைந்து வேலை செய்தோம், ஓய்வு நேரங்கள் நிறைய கிடைத்தது, அப்போதெல்லாம் பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் இருவரும் மிகப் பழைய நண்பர்கள், முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்காக விழிப்புணர்வு படம் எடுத்தோம், அப்போதில் இருந்தே நண்பர்களாக மாறினோம். என்கூடவே அவர் இருந்தார். 1992-93 தொடங்கி இப்போது பிகில் வரை நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம், நிறைய பேசுவார், நிறைய நல்ல விஷயங்களை சொல்வார்.
நம்முடைய தலைவிதி என்னவென்றால், ஒருவர் இறப்புக்கு பின்புதான் அவர்களது நினைவு நம்மை வாட்டும், அவர்களுக்கு ஏதேனும் செய்யாமல் விட்டு விட்டோமா என நினைப்போம், நகைச்சுவை நடிகர்தான், ஆனால் அதில் சமூகம் பற்றிய பார்வைதான் அவருக்கு இருக்கும்.
ஒரு தனிமனிதனாக என்னால் இந்த வலியை உணர முடிகிறது, ஏனெனில் கடந்த ஆண்டு எனது தம்பியை இழந்தேன், அதே போல் இப்போதும் எனக்கு வலி இருக்கிறது, நாம் வருந்தலாம், இரங்கல் தெரிவிக்கலாம் ஆனால் அது போதுமா ?
ஒரு கலைஞனுக்கான வலி என்பது வேறு, மிகவும் நேர்மையான நகைச்சுவை செய்ய கூடியவர், இன்றைய நடிகர்கள், அவர்களது நகைச்சுவை போன்றவற்றை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பிகிலுக்கு பின் திடீரென போன் செய்து எம்.எஸ்.வி பாடலை பற்றி பேசி சிலாகித்துக் கொண்டிருந்தார். விழா ஒன்றில் விவேக்கிற்கு சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை கொடுத்தார், அனைத்தையுமே சாதிக்க முடிந்த மனிதர் என தெவித்தார்.